செவ்வாய், 30 ஏப்ரல், 2013

(மறு)பிறவி(கள்)



நமது இசைஞானியின்  இசை வடிவில் கேட்ட  மாணிக்கவாசகரின்  திருவாசக பாடல்களில் என்னை மிகவும் கொள்ளை கொண்டது பொல்லா வினையேன் என தொடங்கும் அந்த இருபது  நிமிட பாடல் தான் (எல்லா பாடல்களுமே  ஒரு அற்புதம் தான், எல்லோரும் கண்டிப்பாக கேட்க வேண்டிய ஒரு  படைப்பு )  அதில் வரும் இந்த வரிகள் எனக்குள் ஒரு சிந்தனையை உருவாக்கியது 


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.

ஒரு மனிதன் வெவ்வேறு பிறவிகள் எடுக்கிறான் என்பது  நமது பழங்கால நம்பிக்கை. நாம் பெரும்பாலும் இதை நம் இறப்பிற்கு பிறகு நமது உயிர் வேறொரு உருவம் பெரும், இந்த உடல் அழிந்துவிடும் என்று நினைத்திருக்கலாம். நான் இதை வேறொரு கோணத்தில் பார்க்க ஆசைபடுகிறேன். நேற்று புல்லாய் இருந்தது இன்று நான் உட்கொண்ட உணவு வழியாக எனக்குள்ளே ரத்தமாக, தசையாக மாறிவிட்டது, நேற்று பறவையாய், மிருகமாய், பழமாய் இருந்தவைகள் இன்று நானாக உருமாறி உள்ளன. அதே போல் நேற்று என்னுடம்பில் அங்கமாய் இருந்த பல  அணுக்கள்  சுவாசக்காற்றாய், நீராய்  இன்றென்னை விட்டு பிரிந்து காற்றோடு காற்றாக, நிலத்தினுள் நீராக கரைந்து விடுகிறது. இது மட்டுமில்லாமல் நமது உடலில் உள்ள செல்கள் பல தினமும் நாம் சுவாசிக்கும்போதும், குளிக்கும்போதும், உடல் கழிவுகளை அகற்றும் போதும்  மரிக்கிறது புதிதாக வேறு ஒரு செல்கள் பிறக்கிறது. அதாவது நாம் தினமும்   இறந்து கொண்டுதானிருக்கிறோம்,  நம்மில் ஒரு சிறய பகுதியை இழந்து கொண்டுதானிருக்கிறோம். Dr. Frisén என்னும் ஆராய்ச்சியாளர் தனது கட்டுரையில், நமது உடலில் உள்ள செல்களின் ஆயுட்காலம் குறித்து கூறுகையில், நம் உடம்பில் உள்ள செல்களில் ஒரு சில செல்களை தவிர மீதம் உள்ள செல்கள் அனைத்துக்கும் குறகிய அய்ட்காலம் தான் உள்ளது, அதாவது 7-10 வருடத்தில் நமது உடலில் உள்ள அணைத்து செல்களும் புதிப்பிக்க படுகின்றன. 10 வருடத்திற்கு முன் இருந்த உடல் நம்மிடம் இல்லை, நாம் ஒரு புதிய பிறவி. இதை கூறுகையில் கவிஞர் அப்துல் ரஹ்மான் புகைப்படங்கள் குறித்த தனது கவிதையில் கூறுவதுபோல்

"இது புகைபடங்களில்லை, பிணங்களின் படங்கள் " 

என்ற வரி மிக பொருத்தமானதாக தோன்றுகிறது. அதே போல் 10 வருடத்திற்கு முன் இருந்த நமது உடல் வேறொரு வடிவில், புல்லாகி இருக்கலாம், புழுவாகி இருக்கலாம் ஆயினும் அது நம்மிடம் இருந்து பிரிந்த அணு , செல்.  

இதுவே அசைவம் ஏன் உண்ணக்கூடாது  என்பதற்கு சைவம் உண்பவர்கள் கூறும் கருத்து, அதாவது மிருகத்தின் தசைகளை நாம் உண்ணும்போது, நாம் நமக்குள்ளே அந்த மிருகத்தை புதைத்துக்கொள்கிறோம். அதன் மூலமாக நாமும் மிருகத்தின் குணாதிசியங்களை பெறுகிறோம், ஆகவே அசைவம் உண்ணக்கூடாது என்பதே ஆகும். 

மேற்கூறியவை நமது உடல் சம்பந்தப்பட்ட ஒரு பார்வை, எப்படி உடல் இந்த பிறப்பிலே எல்லா உருவங்களும் எடுக்க சாத்தியப்படும் என்பதற்கு எனது பார்வையில் ஒரு சிறய அலசல்.


இதையே நாம் வேறொரு கண்ணோட்டத்தில் பார்த்தால், அதாவது  மனதளவில் நம் வாழ்நாளில், நாம் சில சமயங்களில்  சாதாரன மனிதராய்,  சில சமயங்களில் முதுகெலும்பில்லாத புழுவாய், சில சமயங்களில் சுத்தமான மனம் படைத்த தேவராய், சில சமயங்களில் மிருகமாய், சில சமயங்களில் அரக்கனாய், சில சமயங்களில் கடவுளாய் என எல்லா பிறப்பும் வாழ்கிறோம்.
நாம் பிறர்க்கு உதவும் பொது தேவராகவும்,அன்புகாட்டும் பொது கடவுளாகவும், அநீதியை கண்டு ஒதுங்கி செல்லும் பொது புழுவாகவும், கோபப்படும் போது மிருகமாகவும், சுயநலத்தில் அரக்கனாகவும் வாழ்கிறோம்.
இதில் அதிகபடியான நேரம் எவ்வாறு வாழ்கிறோமோ அதுவே நமது குணாதிசியமாக, நமது வாழ்வாக மாறுகிறது.
எங்கேயோ படித்ததொன்று ஞாபகம் வருகிறது, "எல்லோர்க்கும் எல்லாமும்  நிகழும், நமக்கு தேவையானதெல்லாம் அதற்க்கான நேரமும், பொறுமையும்தான்". எல்லோரிடமும் எல்லா குணங்களும் உண்டு அதில் நல்லதை வெளிகொனரவே தியானம் போன்ற முயற்சிகளால் எல்லோரும் போராடுகிறோம்.


ஆக மனதளவிலும் சரி, உடலவிலும் சரி நாம் எல்லா பிறவியும் எடுக்கிறோம் என்பதே எனது கருத்து. உங்கள் கருத்தையும் தெரிவித்தால் நலம்.


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக