செவ்வாய், 30 ஜூலை, 2013

உடைஞ்ச கண்ணாடி



எனது எதிர்பார்ப்புகளில் 
என்றும் ஏமாற்றாதது 
ஏமாற்றம் மட்டுமே 

என் கனவுகளில் 
வரும் காட்சிகளனைத்தும் 
நானே இயற்றியது 

எனது பகலுக்கும் 
எனது இரவுக்கும் 
நானே சூரியன் 

எனது கேள்விகள் 
எனது பதில்கள் 
மதிப்பெண் பூஜ்ஜியம் 

எனது காயங்கள் 
எனது வலி, தெரியும் 
எனக்கு மட்டும் 

ஆச்சரியங்களும், அதிசயங்களும் 
ஒரு வகையில் ஏமாற்றங்களே 
எதிர்பாராமல் நடப்பதால்



திங்கள், 8 ஜூலை, 2013

இடியாப்பம்








தேவையானவை :

அரிசி மாவு - 2 கப்
தண்ணீர் - 2 1/2 கப்
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தேங்காய் துருவல் - 1 கப்
சர்கரை - தேவையான அளவு

செய்முறை :

அரிசி மாவுடன் உப்பை சேர்த்து ஒரு பத்திரத்தில் களக்கவும்.  இன்னொரு பத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, எண்ணையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும், முதல் குமிழ் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, மாவில் ஊற்றி  நன்றாக கலக்கவும், வெறும் கைகளால் முடியாது, சுடும்.   பிறகு அச்சில் இட்டு இட்லி தட்டில் எண்ணெய் தடவி பிழிந்து விடவும். இட்லி குக்கரில் வைத்து பத்து நிமிடம் கழித்து  இறக்கவும்.

தேங்காய் துருவளில் சர்க்கரை சேர்த்து வைத்து கொள்ளவும்.  இடியாப்பத்தின் மேல் தூவி பரிமாறவும்.







புதன், 3 ஜூலை, 2013

கொக்கு





மீனுக்காக காத்திருக்கும் 
கொக்கு போல 
காத்திருக்கிறேன் நானும் 
ஒத்த கால்ல 

காலுக்கிடையில் ஓடும் மீன 
கொத்தினா ஓடிடுமுன்னு 
கொத்தாத கொக்கு போல 

கண்ணெதிரே நிக்கும் 
உன்கிட்ட, சொல்லாம 
விட்டேன் என் காதல 

பசி மட்டும் அடங்கவே இல்லை 
கொக்குக்கும் எனக்கும் .

திங்கள், 10 ஜூன், 2013

மனிதம்



ஆயுதம் ஏதும் அவர்களிடமில்லை 
அறிவிலும் அளவிலும் நமக்கு நிகரில்லை 
ஆயினும் அவர்களை அழிக்க 
ஆயுதங்கள் பல நமக்கு 

போர் தர்மம் அனைத்தும் மீறி 
நிராயுதபாணி அவர்களுடன் 
இரக்கமற்ற போர் செய்யும் 
நாம் உயிர்களில் உயர்ந்தவன் - மனிதன் 
அவர்கள்   கொசு 
 

இந்த கவிதைக்கான கரு இங்கிருந்து சுட பட்டது, நன்றி 


பயமற்ற வாழ்வு

கொசுக்கள்
எல்லா இடங்களுக்குள்ளும்
எப்படியோ நுழைந்துவிடுகின்றன
எறும்புகள்
எந்தப் பாதுகாப்பிலிருந்தும்
எதையாவது கொண்டுவந்துவிடுகின்றன
மின்மினிகளுக்கு
இந்த இருளைக் கடப்பதில்
எந்தக் குழப்பமும் இல்லை
சில்வண்டுகள் கலைத்துவிடுகின்றன
ஊரடங்கு உத்தரவுகளின்
பயங்கர மௌனங்களை
எவ்வளவுக்கெவ்வளவு
சிறியதாக இருக்கிறோமோ
அவ்வளவுக்கவ்வளவு
பயமில்லாமல் இருக்கலாம்

- மனுஷ்ய புத்திரன்







வெள்ளி, 7 ஜூன், 2013

உன் இஷ்டம்



உன் இஷ்டம்...


எனக்கு எதுவும் தெரியாது நீயே முடிவு செய் என்றும்
எனது தேர்வு உனக்கு பிடிக்காமல் போகிடுமோ என்றும்
எனக்கு இஷ்டமில்லை என்றும்  
தவறானால் அதற்கு  நீயே பொறுப்பு என்றும் 
நான் எது சொன்னாலும் உனக்கு பிடிக்காது என்றும்  
உனக்கு எது பிடிக்கும் என்று தெரியாது என்றும் 
உனக்கு எதுவெல்லாம் பிடிக்குமோ அது எனக்கும் பிடிக்கும் என்றும்  
உன்னோடு இருப்பது தான் முக்கியம் மற்றவை அல்ல என்றும் 
உன் இஷ்டம் போல் எதுவோ அதுவே அர்த்தம் !!!

வியாழன், 6 ஜூன், 2013

பாரிஸ் வெப்பநிலை அறிக்கை





இன்று பாரிஸில் 
அதிக வெயில் 
குறைந்த உடை 
திரிந்த கண்கள் 
தெரிந்த பெண்கள் 

கச்சை துணிகள் 
இச்சை தரும் 
பச்சை வரங்கள் 

உறைந்த உள்ளம் 
துடித்த இதயம் 
உஷன காற்று 
வியர்வை திரவியம் 

உலர்ந்த உதடு 
வறண்ட நாக்கு 
குளிர்ந்த தண்ணீர் 

சுள்ளென சூரியன் 
நினைவில் நீ 

சனி, 1 ஜூன், 2013

சிந்தனைகள் இரண்டு

சிந்தனைகள் இரண்டு 

ஒன்று:

பாரிஸ் நகரத்தை பற்றியும் அதன் மெட்ரோவை பற்றியும் ரசித்து ரசித்து, ஒரு ஐம்பது பக்கத்துக்கு மேல் எந்த ஒரு  சின்ன விஷயத்தையும் விட்டுவிடாமல் தெரு பேர், மெட்ரோ பேர், மெட்ரோ எண், ரேச்தொரன்ட், நூலகம், கடைகள், டாயிலெட்,  பெண்கள், உடை, பீர், வீடுகள், கருப்பர்கள்,  மற்ற இத்யாந்தி இத்யாந்தி விஷயங்கள்  என  நம் கண்ணாயிரம் பெருமாள்  எழுதிருந்த நாவலை மெட்ரோவில் ஆழ்ந்து படித்துக்கொண்டிருந்தேன். பதிமூன்று ஆண்டுகள் இந்த தெருக்களிலும், மெட்ரோக்களிலும் சென்றிருக்கிறேன், அந்த நாவலில் விவரித்திருந்த அனைத்தையும் பார்த்து இருக்கிறேன் ஆனால் அந்த நாவலை படிக்கும் பொது மட்டுமே உணர்ந்தேன், அனுபவித்தேன், ரசித்தேன். புத்தகத்திலிருந்து முகம் நிமிர்த்தி சுற்றி பார்த்தேன், நாவலில் எழுதியிருந்த அனைத்தையும் மீண்டும் அதே ஆழத்துடன் பார்த்தேன், ரசித்தேன்.

பி.கு: சாரு நிவேதிதா எழுதிய "ராஸ லீலா" தான் அந்த நாவல், இதுவரை படித்ததில் இந்த கண்ணாயிரம் பெருமாள் தான் சாருவாக இருக்குமோ என்று ஒரு சந்தேகம்.


இரண்டு:


பிறந்த நாளன்று காலை ஆபீஸ் சென்றவுடன் மதியம் உணவுக்கு ஒரு நல்ல ரேஸ்டோரென்டுக்கு போகலாமா என்று எனது டீமுக்கு மின்னஞ்சலில் அழைப்பு விட்டேன், உடனே பதில் அனைவரிடமும் இருந்து போகலாம் என்று. வழக்கமாக அழைப்பு விடுத்தால் மூன்று பேர் வருவார்கள், மீதி பேர் ஆளுக்கொரு அதாவது ஒரு காரணம் சொல்லிக்கொண்டு வரமாட்டார்கள். என்னுடைய பிறந்தநாள் இவர்களுக்கு தெரிந்திருக்குமோ என்று சந்தேகம். எனது இந்த சந்தேகத்திற்கு காரணம், இங்கு பெரும்பாலான அலுவலகத்தில் அடுத்தவருடைய பிறந்த நாள் நமக்கு தெரியாது, அவர்களும் சொல்ல மாட்டார்கள். எனது மேனேஜருக்கும் மட்டும் தெரியும், ஒருவேளை அவன் தான் சொல்லிருக்க வேண்டும்.  என்னது மேனேஜரை அவன் என்று சொல்லவதா என்று யோசிப்பர்வகளுக்கு, இங்கு நன்கு பழகியவுடன் ஒருமையில் தான் அழைப்போம். சார் சார் என்றெல்லாம் கூன கும்பிடு எல்லாம் போடா வேண்டியதில்லை. ஒரு வேளை  இந்தியாவில் இப்போது அந்த சமரசம் வந்திருக்கலாம் ??? சரி இப்போது சாப்பாடு  விஷயத்திற்கு வருவோம். மணி பண்ணிரண்டு ஆனவுடன் எல்லோரும் எழுந்தனர். வெளியில் இந்த மே மாததிலும் மழை குளிர், ஓவர் கோட்டெல்லாம் எடுத்து மாட்டிக்கொண்டு  கிளம்பினோம். கொஞ்சம் தூரம் நடந்தோம், வழக்கமாக போகும் ஒரு ரேஸ்டோரென்ட்  போக போகிறார்கள் என்று எண்ணினேன் அனால் ஒரு இந்திய ரேஸ்டோரென்ட்  வாசலில் எல்லோரும் நின்று என்னை பார்த்தார்கள், நானும் சரி என்றதும் எல்லோரும் உள்ளே சென்றோம். உள்ளே ஒரு அழகான, ஒரு பிரெஞ்சு இளம் பெண் எங்களை வரவேற்றாள். எத்தனை பேர் என்று கேட்டுவிட்டு எட்டு பேர் உட்காரக்கூடிய மேசையை காட்டினாள். பிறகு வந்து மெனு காட் கொடுத்தாள். எல்லோரும் முதலில் பீர் ஆர்டர் செய்தோம். பின் ஒரு வட இந்தியர் வந்து ஆர்டர் வாங்கினார்  மூன்று பேர் பிரியாணி (1 இறால்  பிரியாணி எனக்கு , கூடவே இறால் வறுவல் அதுவும் எனக்கு தான், 1 தாஜ் மஹால் பிரியாணி , அது என்னவோ ஸ்பெஷல் பிரியாணி என்று நினைக்க வேண்டாம் ஆடு, கோழி, இறால் எல்லாம் கலந்து அதற்கு தாஜ் மகால்ன்னு பேர் வச்சிட்டாங்க, 1 கோழி பிரியாணி), 1 ரோஹஅன்றோஷ், 2 சிக்கன் டிக்கா மாசாலா,  1 மட்டன் குருமா , 1 சிக்கன் குருமா, 4 cheese  நான், 2 கார்லிக் நான், 2 plain நான் .



சனி, 25 மே, 2013

காதல்





உணர்ச்சிகள் மூன்று வகைப்படும் 
சுகம் தரும் உணர்ச்சிகள் 
வலி தரும் உணர்ச்சிகள் 
இரண்டும் ஒரு சேர தரும் உணர்ச்சி 

சுகம் மூன்று வகைப்படும் 
உன்னை நினைத்துக்கொண்டிருக்கையில் 
உன்னோடு பேசிகொண்டிருக்கையில் 
உன்னோடு இருக்கையில் 

வலி மூன்று வகைப்படும் 
உன்னை நினைத்துக்கொண்டிருக்கையில்
என்னோடு பேசாதிருக்கையில் 
உன்னை பிரிகையில் 

இரண்டும் சேர ஒரு உணர்ச்சி, ஒரே வகைப்படும் 
காதல்

புதன், 15 மே, 2013

காரணம்



மகப்பேறு மருத்துவமனையில் 
மருத்துவர் வருகைக்காக 
மங்கைகள் பலர். 
மடியில் கைகள் 
முகத்தில் கலக்கம் 
மனதில் பதற்றம் 

காத்திருக்கும் காரணம் 
கருகலைக்க ஒருத்தி 
கருத்தரிக்க ஒருத்தி 
கருத்தடைக்கு ஒருத்தி 
கருகாக்க ஒருத்தி 

மற்றுமொரு காரணம் 
கணவன், காதலன்
கடமை, கடவுள் 
கனவு, குடும்பம்...

செவ்வாய், 7 மே, 2013

நீ யார்?





ஒரு பாடல் கேட்டவுடன் 
உன் ஞாபகம் வருவதேன் 

கண்கள் திறந்துகொண்டே 
கனவுக்குள் போவதேன் 

இதயம் படபடக்க 
தொண்டை அடிப்பதேன் 

வார்த்தைகள் தேடி 
கவிதை படைப்பதேன் 

ஒவ்வொரு முறையும் 
தேடுகிறேன் நீ யார்?

திங்கள், 6 மே, 2013

நான் சின்ன புள்ளையா இருந்த போது ...

நான் சின்ன புள்ளையா இருந்த போது , நாங்கெல்லாம் அந்த காலத்துல என்று பெருசுகள் நிறைய பேசி கேட்டிருப்போம். இன்று மதிய உணவின்போது எங்கள் அலுவலகத்தில் அப்படி ஒரு பேச்சு எழுந்தது.

இதில் நான் மட்டும் முப்பதை கடந்த ஒரு இந்தியன், மற்றவர்களில்  ஐம்பதை கடந்த ஒருவரும், நாற்பதை கடந்த ஒருவரும்,  முப்பதை கடந்த ஒருவரும் இருந்தனர்.  இந்த உரையாடல்களிருந்து...

நான் சின்ன பையனா இருந்தப்ப , சின்ன சின்ன சிப்பாய் பொம்மைகளை வைத்து மணலில் அடுக்கி வைத்து போர் விளையாட்டு விளையாடுவோம், அந்த சிப்பாய்களை சிறு கோலிகுண்டு கொண்டு தாக்குவோம்.

நாங்கெல்லாம் களிமண்-ல பொம்மை செஞ்சு விளையாடினோம் 

ஆமாம், ஆமாம் நீல நிற பொம்மைகள்   ஜெர்மானிய வீரர்கள் தானே, இரெண்டாம் உலக போர் சீருடை போல் இருக்கும். இரண்டு மணி நேரத்துக்கு மேல் எல்லாத்தையும் அடிக்கி வைத்துவிட்டு பிறகு குண்டு போட்டு அழிப்போம்.

நாங்கெல்லாம் ராஜா ராணி மாறி டிரஸ் போட்டுகினு, கத்தி சண்டை போட்டோம், அதுவும் அட்டக்கத்தி  இல்லனா மணல்ல கொட்ட கட்டி விளையாடுவோம்.  வரலாறு ரொம்போ முக்கியம் தம்பி .

அப்புறம் சின்ன கார் நானே அசம்பள் செய்து விளையாடுவேன், அது ஒரு அடி அளவுல  இருக்கும், உண்மையான கார்ல இருக்குற எல்லா parts உம் இருக்கும் கரெக்டா இருக்கும் அத செய்றதே பெரிய சவாலா இருக்கும், ஒரு வாரம் கூட ஆகும் அவ்ளோ பொறுமையா செய்வோம்

ஆமாம், ஆமாம்,  இப்போ பசங்களுக்கு எல்லாம் உடனே கிடைக்கணும், பொறுமை என்றதே கிடையாது

நாங்கெல்லாம் நுங்கு-ல வண்டி செஞ்சு ஓட்டுவோம், சிகரெட் பெட்டியில சோடா மூடி வச்சு வண்டி செய்வோம். ஏன்னா நாங்கெல்லாம் அப்போவே  இஞ்சினியர் .
  
அதேபோல் கப்பலும் செய்வோம், எல்லா விதமான கப்பலும் செய்வோம், விசை படகு, பாய்மர கப்பல் ...


நாங்களும்தான் செஞ்சோம் பேப்பர்-ல , சாதா கப்பல், இரட்டை கப்பல், கத்தி கப்பல் எல்லாம். செஞ்சு சாக்கடைல, மழை தண்ணில விடுவோம். திருவிழா கடைல கப்பல் வாங்கி அதுல இருக்கிற திரிய கொளுத்தி தண்ணில விடுவோம் அது டப டப ன்னு போகும் 

இந்த வீடியோ கேம் எல்லாம் வரதுக்கு முன்னாடி நாங்க பல விளையாட்டு வச்சிருந்தோம், .....

நாங்களும், சின்ன கட்டமான டப்பால தண்ணி இருக்கும், கீழ இரண்டு பட்டன் இருக்கும் அத அழுத்தினா கலர் கலரா வளையம் கிழ இருந்து மேல பொய் ஒரு மீன் போல இருக்குறதுல மாட்டும் . கட்ட கட்டமா படம் விக்கும் அதெல்லாம் வாங்கி ஒரு நீட்டு பேப்பர்-ல ஒட்டி  ஒரு சிகரெட் பெட்டியில் கட்டமா வெட்டி அதுல இரண்டு குச்சி சொருகி படம் சுருட்டி சுருட்டி பார்ப்போம்  .


நாங்க மணல் தொட்டில விளையாடுவோம், எந்த நோயும் வந்ததில்ல, இப்போ பசங்க விளையாட ஸ்பெஷல் மண் விக்குது 

இரண்டு சாக்கடைக்கு நடுவுல மண் தெரு தான் எங்க ground, எத்தனை தடவை சாக்கடையிலிருந்து பந்து எடுத்து மண்ல தேச்சிட்டு விளையாடி இருக்கோம், எங்கள எதுவும் ஒன்னும் பன்னல 


அப்புறம் வீடியோ கேம்ஸ் வந்துச்சு, அதுகூட  டிவி-ல சேனல் தேடுவது போல் தேடனும்.

எங்களுக்கு ரேடியோ தான் எல்லாமே, சீரியல், திரை சித்திரம், ஒரு பட பாடல் எல்லாமே 

சரி நம்ப பசங்க இன்னும் ஒரு இருபது, முப்பது வருஷம் கழித்து இதே போல் பேசினால் என்ன பேசுவார்கள்.





சனி, 4 மே, 2013

நிழல்கள்





நீங்கள் பார்க்கும் நிழல்கள் 
நானில்லை, நிஜமில்லை 
ஒளியின்றி நிழலில்லை 
நிழலென்றும் ஒளியில்லை 

பல கோணங்களிலிருந்து ஒளி 
பல கோணங்களில் என் நிழல்
நீங்கள் பார்க்கும் நிழல்கள் 
நானில்லை, நிஜமில்லை 

கீழிருக்கும் ஒளி என்னை 
நீட்டமாய் காட்டும் 
மேலிருக்கும் ஒளியோ என்னை 
குட்டையாய் காட்டும்

அருகிலிருக்கும் ஒளி என்னை 
பெரிதாய் காட்டும் 
தொலைவிலுள்ள ஒளியோ என்னை 
புகையாய் காட்டும் 

 இரட்டையோளி என்னை 
இரெண்டாய் காட்டும் 
நான்கோளி என்னை 
நான்காய் காட்டும்   

அலைகின்ற  தீப ஒளியோ
நான்  அலைவதாய் காட்டும்
நிலையாய் நான் நிற்கிறேன் 
அலையாய் உங்கள் பார்வையில் 

என் நிழல் என் விருப்பமில்லை 
நான் அதற்க்கு காரணமில்லை 
நானாய் நானிருக்க 
நிழலாய் என்னை பார்ப்பதேன் 


ஒளியின்றி, நிழலுமின்றி 
நிஜமாய் நானென்றும் 
உங்கள் ஆருயிர் நண்பன். 





செவ்வாய், 30 ஏப்ரல், 2013

(மறு)பிறவி(கள்)



நமது இசைஞானியின்  இசை வடிவில் கேட்ட  மாணிக்கவாசகரின்  திருவாசக பாடல்களில் என்னை மிகவும் கொள்ளை கொண்டது பொல்லா வினையேன் என தொடங்கும் அந்த இருபது  நிமிட பாடல் தான் (எல்லா பாடல்களுமே  ஒரு அற்புதம் தான், எல்லோரும் கண்டிப்பாக கேட்க வேண்டிய ஒரு  படைப்பு )  அதில் வரும் இந்த வரிகள் எனக்குள் ஒரு சிந்தனையை உருவாக்கியது 


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.

ஒரு மனிதன் வெவ்வேறு பிறவிகள் எடுக்கிறான் என்பது  நமது பழங்கால நம்பிக்கை. நாம் பெரும்பாலும் இதை நம் இறப்பிற்கு பிறகு நமது உயிர் வேறொரு உருவம் பெரும், இந்த உடல் அழிந்துவிடும் என்று நினைத்திருக்கலாம். நான் இதை வேறொரு கோணத்தில் பார்க்க ஆசைபடுகிறேன். நேற்று புல்லாய் இருந்தது இன்று நான் உட்கொண்ட உணவு வழியாக எனக்குள்ளே ரத்தமாக, தசையாக மாறிவிட்டது, நேற்று பறவையாய், மிருகமாய், பழமாய் இருந்தவைகள் இன்று நானாக உருமாறி உள்ளன. அதே போல் நேற்று என்னுடம்பில் அங்கமாய் இருந்த பல  அணுக்கள்  சுவாசக்காற்றாய், நீராய்  இன்றென்னை விட்டு பிரிந்து காற்றோடு காற்றாக, நிலத்தினுள் நீராக கரைந்து விடுகிறது. இது மட்டுமில்லாமல் நமது உடலில் உள்ள செல்கள் பல தினமும் நாம் சுவாசிக்கும்போதும், குளிக்கும்போதும், உடல் கழிவுகளை அகற்றும் போதும்  மரிக்கிறது புதிதாக வேறு ஒரு செல்கள் பிறக்கிறது. அதாவது நாம் தினமும்   இறந்து கொண்டுதானிருக்கிறோம்,  நம்மில் ஒரு சிறய பகுதியை இழந்து கொண்டுதானிருக்கிறோம். Dr. Frisén என்னும் ஆராய்ச்சியாளர் தனது கட்டுரையில், நமது உடலில் உள்ள செல்களின் ஆயுட்காலம் குறித்து கூறுகையில், நம் உடம்பில் உள்ள செல்களில் ஒரு சில செல்களை தவிர மீதம் உள்ள செல்கள் அனைத்துக்கும் குறகிய அய்ட்காலம் தான் உள்ளது, அதாவது 7-10 வருடத்தில் நமது உடலில் உள்ள அணைத்து செல்களும் புதிப்பிக்க படுகின்றன. 10 வருடத்திற்கு முன் இருந்த உடல் நம்மிடம் இல்லை, நாம் ஒரு புதிய பிறவி. இதை கூறுகையில் கவிஞர் அப்துல் ரஹ்மான் புகைப்படங்கள் குறித்த தனது கவிதையில் கூறுவதுபோல்

"இது புகைபடங்களில்லை, பிணங்களின் படங்கள் " 

என்ற வரி மிக பொருத்தமானதாக தோன்றுகிறது. அதே போல் 10 வருடத்திற்கு முன் இருந்த நமது உடல் வேறொரு வடிவில், புல்லாகி இருக்கலாம், புழுவாகி இருக்கலாம் ஆயினும் அது நம்மிடம் இருந்து பிரிந்த அணு , செல்.  

இதுவே அசைவம் ஏன் உண்ணக்கூடாது  என்பதற்கு சைவம் உண்பவர்கள் கூறும் கருத்து, அதாவது மிருகத்தின் தசைகளை நாம் உண்ணும்போது, நாம் நமக்குள்ளே அந்த மிருகத்தை புதைத்துக்கொள்கிறோம். அதன் மூலமாக நாமும் மிருகத்தின் குணாதிசியங்களை பெறுகிறோம், ஆகவே அசைவம் உண்ணக்கூடாது என்பதே ஆகும். 

மேற்கூறியவை நமது உடல் சம்பந்தப்பட்ட ஒரு பார்வை, எப்படி உடல் இந்த பிறப்பிலே எல்லா உருவங்களும் எடுக்க சாத்தியப்படும் என்பதற்கு எனது பார்வையில் ஒரு சிறய அலசல்.


இதையே நாம் வேறொரு கண்ணோட்டத்தில் பார்த்தால், அதாவது  மனதளவில் நம் வாழ்நாளில், நாம் சில சமயங்களில்  சாதாரன மனிதராய்,  சில சமயங்களில் முதுகெலும்பில்லாத புழுவாய், சில சமயங்களில் சுத்தமான மனம் படைத்த தேவராய், சில சமயங்களில் மிருகமாய், சில சமயங்களில் அரக்கனாய், சில சமயங்களில் கடவுளாய் என எல்லா பிறப்பும் வாழ்கிறோம்.
நாம் பிறர்க்கு உதவும் பொது தேவராகவும்,அன்புகாட்டும் பொது கடவுளாகவும், அநீதியை கண்டு ஒதுங்கி செல்லும் பொது புழுவாகவும், கோபப்படும் போது மிருகமாகவும், சுயநலத்தில் அரக்கனாகவும் வாழ்கிறோம்.
இதில் அதிகபடியான நேரம் எவ்வாறு வாழ்கிறோமோ அதுவே நமது குணாதிசியமாக, நமது வாழ்வாக மாறுகிறது.
எங்கேயோ படித்ததொன்று ஞாபகம் வருகிறது, "எல்லோர்க்கும் எல்லாமும்  நிகழும், நமக்கு தேவையானதெல்லாம் அதற்க்கான நேரமும், பொறுமையும்தான்". எல்லோரிடமும் எல்லா குணங்களும் உண்டு அதில் நல்லதை வெளிகொனரவே தியானம் போன்ற முயற்சிகளால் எல்லோரும் போராடுகிறோம்.


ஆக மனதளவிலும் சரி, உடலவிலும் சரி நாம் எல்லா பிறவியும் எடுக்கிறோம் என்பதே எனது கருத்து. உங்கள் கருத்தையும் தெரிவித்தால் நலம்.


  

திங்கள், 29 ஏப்ரல், 2013

ஒரு நாள் ஒரு காதல் - சிறுகதை

காதலை பற்றிய ஒரு நீண்ட உரையாடலுக்கு பின் தனிமையில் எதோ சிந்தித்து கொண்டிருந்தேன். அப்படியே பின்னோக்கி சென்று யார் யாரையெல்லாம் நான் காதலித்தேனென்று (ஒருதலையாக தான் ) எண்ணிக்கொண்டிருந்தேன் . அப்போது சுத்தியால் பின்மண்டையில் அடித்தது போல் ஒரு கேள்வி "அதெல்லாம் சரி உன்னை யாரவது காதலித்தார்களா என்று" நானும்  இந்த கேள்விக்கு விடை என்னுடய கடந்த காலத்தில் இருக்கிறதா  என்று தேடி கொண்டிருக்கும் போதே "ஒன்னு கூட கிடையாது என்று பதில்". ஆமாம் ஒன்று கூட  இல்லை என்று நினைக்கும் போதே "இருக்கு" என்று இன்னொரு குரல், இருக்கா, அது எப்படி எனக்கு தெரியாமல் போனது, என்னிடம் யாருமே சொல்லவேயில்லையே. நீ அப்போது வேறொரு உலகத்தில் இருந்தாய், உன் காதில் விழுந்தது கூட உன் மூளைக்கோ, மனதிற்க்கோ செல்லவில்லை.    

 யாரது என் மனைவியா, அதான் தெரியுமே  அவளில்லை, அப்போ யார்? என்னுடன்  டியூஷன் படித்த பெண்ணா(நான் படிச்சது ஆண்கள் பள்ளி),  அக்கம்பக்கத்து வீட்டு பெண்ணா, கோவிலுக்கு வருகிற பெண்ணா, உறவுக்கார பெண்ணா,  கல்லூரியில் என்னுடன் படித்தவளா யாரது ? நீ வேலை செய்த இடத்தை விட்டு விட்டாயே. அங்கே யார்  என்ற யோசனையில் மூழ்கிபோனேன்.

ஒரு கம்ப்யூட்டர்  சென்டரில்  வேலை செய்து கொண்டிருந்த நேரம்,  அதிக கூட்டம் இல்லாத நேரம்  ஒரு நாளைக்கு இரண்டு மூன்று வகுப்புகள் தான் இருந்தன. ஒரு நாள் காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது , கான்வென்டில் தங்கி படிக்கும் இரண்டு பெண்கள் வருவார்கள் என்று சொன்னார்கள். அவர்கள் படிக்க வந்தார்களா, வேலை செய்ய வந்தார்களா என்று ஞாபகம் இல்லை. வழக்கமாய் இருக்கும்  எதிர்பார்ப்போ, இரண்டு பெண்களை சந்திக்க போகும் ஆவலோ, எந்த ஒரு காதல் சுரப்பியும் என்னை ஏதும் செய்யவில்லை.

  பத்து மணிப்போல் இரண்டு பெண்கள்  ஒரு சைக்கிளில் வந்தனர், இருவரும் சராசரி கிராமத்தின் ஏழை  பெண்கள் என்பது பார்த்ததும் தெரிந்தது, ஒல்லியான தேகம், எண்ணெய்  வைத்த தலை, மலிவான சுடிதார், சார் என்று அழைக்கும் குரல். ஒருத்தி கொஞ்சம் உயரம், கொஞ்சம் கருப்பு இன்னொருத்தி கொஞ்சம் குள்ளம் கொஞ்சம் மாநிறம். இருவரும் வந்து அறிமுக படுத்திகொண்டார்கள். இரெண்டொரு நாட்கள் இப்படியே சென்றது, தினமும் இரண்டு வகுப்புகளுக்கிடையே நங்கள் பேசி கொண்டிருப்போம், அதில் ஒருத்தி கேள்வி மேல் கேள்வி கேட்பாள், சார் உங்களுக்கு பிடிச்ச நடிகர் யார், நடிகை யார், என்ன கலர் பிடிக்கும் , என்ன புத்தகம் படிப்பீர்கள் இப்பிடியாக  சார் சார் சார்ன்னு பேசிகொண்டே இருப்பாள், இன்னொருத்தி ஏதும் பேசமாட்டாள். ஒரு நாள் மதிய உணவிற்கு பிறகு பேசிகொண்டிருந்தோம் திடீரென்று அவள் சார் ஒரு விளையாட்டு  விளையாடலாமா என்றாள், என்ன விளையாட்டு என்றேன் ரெண்டு பெரும் கண் சிமிட்டாமல்  பார்த்துகொண்டே இருக்க வேண்டும் யார் முதலில் கண்சிமிட்டுகிறார்களோ அவரே தோற்றவர் என்றாள், சரி என்று பார்க்க ஆரம்பித்தோம், பார்த்துக்கொண்டிருந்தோம், கருத்தமுகம் , வெள்ளைக்கண்கள், கருவிழி, பாப்பா என்று பயணித்து கொண்டிருந்தேன், இதில் யார் தோற்றோம் என்று தெரியவில்லை, அதற்குள் மதிய வகுப்பு ஆரம்பிக்க நேரம் ஆனதால் விளையாட்டை நிறுத்திவிட்டு சென்றுவிட்டேன். மாலை வகுப்பு முடிந்தவுடன் ஒரு தொலைபேசி அழைப்பு.

எனக்கு நிச்சயதார்த்த தேதி முடிவு செய்யபட்டது என்று சொன்னார்கள், நானும் அந்த செய்தியை எல்லோருக்கும் சொல்லிவிட்டு வீட்டுக்கு சென்றேன், அடுத்த நாள்  வேலைக்கு வந்தேன், அன்று ஒருத்தி மட்டும் தனியாக வந்தாள், எங்கே இன்னொருத்தி என்றேன் அவளுக்கு உடம்பு சரில்லை என்றாள், அடுத்தநாளும் அவள் வரவில்லை ஏன் என்று கேட்டேன் இனிமே அவ வரமாட்டா என்றாள்  ஏன் என்று மீண்டு கேட்டதும் சொன்னாள்,

உங்களுக்கு கல்யாணம்ன்னு சொன்னீங்கல்ல அதான்,
 அதுக்கு?
அவ ... உங்கள ...
என்ன லவ் பண்றாளா ?
நீங்க ஏன் முன்னாடியே சொல்லல,
எனக்கு கல்யாணம்ன்னு தலையில எழுதியா  ஓட்டிக்க முடியும், 
அவளால அதை  தாங்கிக்க முடியல, ரொம்போ அழுதா

இந்த சம்பவம்  என் சிந்தனையில் நில்லாமேல் போனதிற்கு, நான் காதலிக்கவும், என்னை காதலிக்கவும் ஒருத்தி வந்துவிட்டாள் என்ற சந்தோசமே. இதுவே அந்த பெண்ணை சந்தித்த போதும், பேசிக்கொண்டிருந்தபோதும், விளையாடியபோதும் எனக்குள் எந்த ஒரு சலனமும் சந்தேகமும் வராமல் இருந்ததன் காரணம்.

என்னிடம் சொல்லபடாத, நான் சுவைக்காத, நான் தவறவிட்ட  ஒரே காதல் அதன் ஆயுள் ஒரே நாள் .
இப்போ சொல் என்னை யாரவது காதலித்தார்களா ?










    



     



சனி, 27 ஏப்ரல், 2013

சந்தோசம்


சென்ற ஞாயிறு(எந்த ஞாயிறு ன்னு சரியா தெரியல ) பிரெஞ்சு தொலைக்காட்சியில் ஒரு பிரபல ராப் பாடகியின் பேட்டி ஒன்று ஒளிபரப்பானது, அதில் சிந்திக்க  வேண்டிய இரண்டு விஷயங்களை உங்களோடு  பகிர்ந்து கொள்கிறேன்.







DIAMS என்கிற Melanie , இவர் 2003 முதல் பிரான்சு  நாட்டின் ராப் ராணியாக வளம்வந்தவர்; இவருடைய பல பாடல்கள் காதல் பற்றியும், சமுதாய கோபம்  பற்றியும் சில பாடல்கள் அரசியல்வாதிகள் பற்றி நேரடி விமர்சனமாக இருந்தது,   இவருகேன்று ஒரு இளைஞர்  கூட்டம் இருந்தது, குறிப்பாக பெண்கள். இவருடைய பாடல்கள் இளைய சமுதாயத்தை கெடுப்பதாய் சில பழமைவாதிகள் குறை கூறுவதுண்டு. பல இசை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று மிகவும்   பரபரப்பான நட்சத்திரமாக இருந்தார். 2008 இறுதிகளில் இவர் திடீரென்று இசை உலகிலிருந்து காணமல் போனார். சரியாக ஒரு வருடம் கழித்து ஒரு பெரிய பத்திரிகை ஒன்றில் அவர் புகைப்படம் ஒன்று வெளியானது, அதில் அவர் முழு பர்தா அணிந்த ஒரு முஸ்லிமாக இருந்தார், இது அனைவருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது, ஏற்கனவே இவர் மீது குறை கூறிய பழமைவாதிகள், இவர் மத மாற்றத்திற்கு ஊக்குவிக்கிறார் என்றும், முஸ்லிம் மதத்தை பரப்புகிறார் என்றும், இவரை உதரணமாக கொண்ட இளைய சமுதாயதிற்கு தவறாக வழிகாட்டுகிறார் என்றெல்லாம் கொதித்தனர். Diams அந்த பத்திரிகை மீது வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றார்.
பிறகு ஒரு பெரிய இடைவெளி விட்டு, இப்பொழுது சுயசரிதை ஒன்றை வெளியிட்டார், அதை தொடர்ந்து  தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார், அந்த பேட்டியை பற்றியது தான் இந்த பக்கம்.

பலவகையான  கேள்விகள் இந்த பேட்டியில் கேட்கப்பட்டது, அதை இரண்டு கேள்விகளாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


ஒரு மிக பெரிய பிரபிலமான நட்சத்திரமாக இருந்த நீங்கள், ஒரு ரசிகர் கூட்டத்தை உங்களுக்கென்று வைத்திருந்த நீங்கள், உங்களுக்கு ஒரு வீடு உங்கள் அன்னைக்கு ஒரு வீடு என்று இரண்டு வீடுகள் வாங்கி வசதியாய் இருந்த நீங்கள் ஏன் திடீரென்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு சென்றீர்கள்?

ஆம்

 நீங்கள் சொல்வதுபோல் எல்லாமே  இருந்தது பணம் பேர் புகழ் , ஆனால் எதோ ஒன்று இல்லாமலே இருந்தது. மிக அதிகமான நாட்கள் நான் தனியே என் படுக்கையறையில் இருப்பதாய் உணர்ந்தேன், பல முறை கண்ணீர் விட்டழுதேன், மனோ தத்துவ மருத்துவரை அணுகினேன், மருந்துகள் உண்டேன் இப்பொழுது சந்தோசமாய் இருக்கிறேன். என்னை அன்பு செய்த உள்ளங்களை என்னால் மறக்க முடியாது அனால் இந்த வாழ்க்கை  எனக்கு தேவை பட்டது.


பிறப்பில் கிறிஸ்துவரான நீங்கள் இஸ்லாத்தை தழுவ காரணம்  என்ன ?

எனது தாத்தாமார்களும் பாட்டிமார்களும் மிகவும் பக்தியுடன் தான் இருந்தார்கள், என்னை ஞாயிற்று கிழமைகளில் ஆலயத்திற்கு அழைத்து செல்வார்கள் , எனது பெற்றோர்கள் கடவுளை நம்பினாலும் சில சமயங்களில் மட்டுமே ஆலயத்திற்கு சென்றார்கள், நான் மனம் வருத்தத்தில் இருந்தபோது எனக்கு ஒரு நண்பர் மூலமாக குரான் திருநூல் கிடைத்தது, நானும் அதை இரண்டு முறைக்கு மேல் படித்தேன், மிகவும் ஆறுதல் அடைந்தேன். இஸ்லாமியர்கள் செய்யும் தவ முயர்ச்சியும், ஜெபங்களும் என்னை வெகுவாய் கவர்தன. யாரும் இப்பொழுது அதுபோல் கடவுளுக்கான அன்பை வெளிபடுத்துவது இல்லை. அதுவே எனக்கு பிடித்திருந்தது. அவ்வாறு வெளிபடுத்துதல் மிகவும் அவசியம் என்று எண்ணுகிறேன் இப்பொழுது நான் மிகவும் அமைதியாகவும் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.

இந்த இரண்டு பதில்கள் என்னை மிகவும் பாதித்தது, இதில் சந்தோஷ பட வேண்டிய விஷயம் என்ன வென்றால் , வழக்கமாக pop பாடகர்கள் போதைக்கு அடிமையாவதை பார்த்திருக்கலாம், தவறான பாதைக்கு சென்று இறந்தும் பொய் இருக்கலாம், ஆனால் இவர் ஒரு அன்பின் பாதையை தேர்ந்தேடுதுள்ளார். இதில் நான் சிந்தித்த விஷயம் என்னவென்றால் நாம் இதுவரை நம்பிவந்த மதத்தை நம் பிள்ளைகளுக்கு சொல்லி தருகிறோமோ இல்லை ஏதும் சொல்லாமல் ஒரு வெற்றிடத்தை தருகிறோமா? அதுவே நாளை நம் பிள்ளைகள் பாதையாகி போகிறது. ஒரு வேற்றிடத்தில் ஒரு நல்ல எண்ணம் புகுந்தால் நல்லது, அதுவே ஒரு தப்பான(போதை, தீவிரவாதம்,... ) எண்ணமாக ஆகிவிட்டால் என்ன செய்வது.  இப்படித்தான் எல்லா மத மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன  என்பதும் மறுக்க முடியாது. எந்த மதமாகினும் அன்பின் வழி சொன்னால் எந்த ஒரு தடையும் இல்லை.

ஆரம்பத்தில் இரண்டு விஷயம் என்று சொன்னேன் அல்லவா, பணம், பேர், புகழ் மட்டும் இருந்தால் ஒருவன் சந்தோசமாக  இருக்க முடியாது, என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்(இது எதுவேமே இல்லை என்றாலும் சந்தோசமாய் இருக்க முடியாது , சந்தோசம் என்பது நான் வரையறுக்கும் ஒரு விஷயமே, என்னுடைய பழைய பதிவில் இதே போல்  ஒரு சிறை கைதியின் சந்தோசத்தை சொன்னேன் )



பி கு : இந்த பதிவு diams அவர்களை பற்றியோ அவர்களின் இசையின் தரத்தை பற்றியோ அவர்களின் மத தேர்வை பற்றியோ இல்லை .
 இது அறிவுரை இல்லை எனது எண்ண ஓட்டங்களே








வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

சினிமா - கடல்


கடல் - ஒரு எண்ணோட்டம் 


ஏன் பார்க்கவில்லை 
சமூக வலைதளங்களிலும் , பலரின் பதிவுகளிலும் கடலை பற்றி பல விதமாக எல்லோரும் ஒரே விதமாக விமர்சித்து இருந்தார்கள். இதனால் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஒரு உந்துதல் இல்லாமலே இருந்தது. 

ஏன் பார்த்தேன் 
எனது அக்கா பையன் , சமூக இணையத்தில் கடல் ஒரு நல்ல படம் என்று போட்டிருந்தான்,  சிறிய உரையாடலுக்கு பின் சரி நாமும் பார்த்து ஒரு முடிவுக்கு வருவோம் என்று முடிவு செய்து நேற்று தான் பார்த்தேன் .

அவனிடம் செய்த உரையாடலில் ஒரு சிறு பகுதி 

அவன் : இது நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையே  நடக்கும் ஒரு போராட்டம் 
நான் : எல்லா படத்திலும் அதே கதை தானே, கடைசியில்  நல்லது வெல்லும்.
அவன்: இல்லை அது நல்லவர்களுக்கும் கேட்டவர்களுக்கும் நடக்கும்   போராட்டம் , இது    நல்லது கேட்டது இரெண்டுக்கும் நடக்கும் போராட்டம், சிலருக்கு தான் அது புரியும்
நான்: சரி பார்ப்போம்

கதை 
நம்மவர் படத்தின் கடைசி பகுதியில் கமலுக்கும் கரணுக்கும் இடையே நடக்கும் சண்டையின் பொது மாணவர்கள் கரண் மீது கல் எறிவார்கள் , கமல் அவனை மறைத்துக்கொண்டு காப்பாற்ற, அதில் ஒருவன் சொல்லுவான்

 "நகருங்க சார் , இவன் எல்லாம் திருந்தவே மாட்டான், இவனை நாங்கள் கல்லால் அடிச்சே கொள்கிறோம்" 

என்று அதற்கு கமல் சொல்லுவார், 

"ஏன் திருந்தனும், ஒருத்தனுக்கு மன்னிப்பே இல்லன்னு தெரிஞ்ச அப்புறம் ஏன் திருந்தனும், எவன் திருந்துவான் " 

என்று, நான் எழுதினந்து கொஞ்சம் முன்ன பின்ன தப்பா இருந்தாலும் அந்த வசனம் இப்படியாக  தான் போகும்.



சரி அதுக்கும் கடல் படத்துக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்டால் அது தான் மன்னிப்பு.

மன்னிப்பு கிடைக்காத அர்ஜுன் என்னவாகிறார் , மன்னிப்பு கிடைத்த கௌதம் கார்த்திக்  என்னவாகிறார் என்பது தான் கதை. இந்த ஒரு வரி படத்தின் கடைசியில் வரும் படகு காட்சியில் தான் புரியும்.

 இது தான் படத்தின் அழகான, அழுத்தமான, ஆழமான காட்சி. அதுக்கு ஒரு WOW... 

அப்பிடின்னா மீதி படம் என்றெல்லாம் கேட்க கூடாது. படம் கடைசிவரை பொறுமை வேண்டும்.

இந்த படம் பார்த்து முடித்தவுடன் எனக்கு ஏனோ ராவணன் படம் ஞாபகத்தில் வந்தது 
அந்த படத்திற்கும் ராமாயணத்தின் தழுவல் என்றெல்லாம்  விமர்சனங்கள் இருந்தன,
படம் பார்த்தபின் கடைசியில் ஐஸ் யை மீண்டும் வந்து விக்ரமை சந்திக்கும் காட்சி, அங்கே ஒரு WOW... .

அங்கே தான் மணிரத்தினம் நிற்கிறார் என்று தோன்றுகிறது.


மற்றபடி படத்தில் சொல்லவேண்டும் என்றால், கிறிஸ்துவர்கள் என்றால் தமிழ் சினிமா ஆண்டாண்டு காலமாக ஒரு வடிவம் வைத்திருகிறது, அது இதிலும் தெரிகிறது. 
மகுடி பாடல் இரண்டு மூன்று இடங்களில் வருகிறது அதில் முதலில் வரும் பொது மட்டும் காட்சியோடு ஒட்டவில்லை,  நீ பாம்பு , நான் மகுடி டா ...

மற்றபடி துளசி, கௌதம் இருவரையும் வரவேற்போம். அழகாக இருக்கிறார்கள், நன்றாக வளர வாழ்த்துக்கள் .

படம் எப்பிடின்னு நீங்களே பார்த்து முடிவுக்கு வாங்க.    என் அக்கா பையனுக்கு வேறு விதமாக பிடித்திருந்தது, எனக்கு வேறு விதமாக பிடித்திருந்தது, உங்களுக்கு  ... கமெண்ட்ல போடுங்க