திங்கள், 22 அக்டோபர், 2012

அமெரிக்கா பயணம் சில நிமிடங்களில்

சென்ற பகுதியை படிக்க 



காலையில் கிளம்பி பெற்றோருக்கு தொலைபேசியில் விடை கூறிவிட்டு, பிள்ளைகளை எழுப்பி அவர்களிடம் முத்தங்கள் பெற்று, விடையும் பெற்று மனைவியுடன் ரயில் நிலையம் நோக்கி சென்றோம், உடனே வந்துவிட்டது ரயில் நிலையம், பிரிவினை பார்வையிலும் பகிர்ந்துக்கொண்டு பிரிந்தோம், அவள் செல்லும் வரை நின்றுவிட்டு பின் ரயில் நிலையம் நுழைந்தேன். விமானநிலையம் செல்ல நடுவில் ஒரு train மாறவேண்டும். மாறவேண்டிய இடத்திற்கு போகும் ரயில் பாதி வழிதான் போகும் அங்கிருந்து ஒரு பேருந்து பிடித்து செல்லவேண்டும் என்று அறிவிப்பு பலகையில் பார்த்ததும் சற்றே குழப்பம், வழக்கமாய் தோன்றும் சகுன தடை எண்ணம் தோன்றாமல் இல்லை, அந்த எண்ணத்தை சற்றே கண்டுக்கொள்ளாமல், வழக்கமாய் எனக்குள் நடக்கும் சுய அறுதல் வார்த்தைகளும் அதற்கு எதிர் வாக்குகளுக்கும் இடம் கொடுக்காமல், மனைவிக்கு அலைப்பேசியில் அழைப்பு விடுத்தேன், அவளும் வந்தாள் பதற்றத்துடன், பாதி பனி மூட்டத்தில் என்னை விமான நிலையம் வரை வந்து விட்டு சென்றாள். தனியாய் போகிறாள், அவள் driving யில் நம்பிக்கை இருந்தாலும், அவள் வீடு செல்லும் வரை கொஞ்சம் பதற்றமாகவே இருந்தது.

விமானநிலையம் உள்ளே ஒரு பெரிய வரிசை நின்றுகொண்டிருந்தது, இத்தனை பேர் இவ்வளவு கூட்டமா எங்கே தான் போகிறார்களோ தெரியவில்லை; நான் அங்கு தனியாய் இருந்த ஒரு சுய சேவை இயந்திரத்தில் என் பயணத்தை பதிவு செய்தேன், அதில் இருக்கை எண்ணை தேர்வு செய்யும் வாய்ப்பு இருப்பதால், உடனே ஜென்னல் அருகே இருக்கை கிடைக்குமா என்று தேடினேன், எங்கும் இல்லை, இருந்தாலும் இப்பொழுது இருக்கும் இருக்கையை விட பின்னால் ஜென்னல் ஒட்டிய வரிசையில் நடு இருக்கை நன்றாக இருக்கும் என்று நினைத்து  அதை தேர்வு செய்தேன், அதை தேர்வு செய்ததில் இன்னொரு காரணமும் இருக்கு, எங்கே நம்மை சக ஊழியர்களுடன் சேர்த்து உட்காரவைத்துவிடுவார்களோ என்றுதான். சக ஊழியர்களுடன் பயணம் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லையென்றாலும், ஒரு சுதந்திரம் வேண்டியே இந்த முடிவு. விமான நிழைவு சீட்டு எடுத்தவுடன் என் சகாகளுக்கு(சக ஊழியார்களுக்கு) அலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று விசாரித்துவிட்டு நான் அவர்களுக்காக காத்துகொண்டு இருப்பதாக சொல்லிவிட்டு, காத்திருந்தேன் மணி 8 : 30.

கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது, ஒன்பது மணிக்கு ஒரு சகா அலைப்பேசியில் அழைத்தார் நான் எடுப்பதற்குள் இணைப்பு துண்டாகிவிடவே அவர் நுழைவு சீட்டு பெறவும் பெட்டியை மற்ற பெட்டிகளுடன் விமானத்தில் ஏற்றவும் சென்றுவிட்டார், நான் அதுவரை என் பெட்டியை என்னிடமே வைத்திருந்ததால் நானும் பெட்டியை ஒப்படைக்க சென்றேன், அங்கேயும் வரிசை எல்லாம் முடிந்து சோதனை வரிசைக்கு சென்றோம் அது இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டது, இரெண்டாவது சகாவும் வந்து சேர்ந்தார் மூவரும் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தோம், இன்னும் 50 நிமிடங்களில் விமானம், வரிசை நகர்வதாக தெரியவில்லை திடீரென்று ஒரு விமான பணிப்பெண் வந்து எங்களை ஒரு குறுக்கு வழியில் எல்லோருக்கும் முன்னதாக பாதுக்காப்பு சோதனைக்கு அனுப்பினார். நாங்களும் அவசரம் அவசரமாக பாதுகாப்பு சோதனைகளை  முடித்து கடைசி பத்து நிமிடம் இருக்கும் பொது விமானத்துள் நுழைந்தோம், எனது இருக்கை பின்னால் இருப்பதால் அனைவரையும் கடந்து எனது இருக்கை எண்ணை பார்த்துக்கொண்டே சென்றேன் 56B அங்கே  ஒரு இன்ப அதிர்ச்சி எனக்காக காத்திருந்தது  ( கண்ணா ஒரு லட்டு தின்ன ஆசையா !!!) எனக்கு பக்கத்தில் ஒரு அழகான பெண் என்னை  பார்த்ததும் சிரித்து  எனக்கு வழிவிட்டாள் மணி பார்த்தேன் 10 : 33 இன்னும் மூன்று நிமிடத்தில் விமானம் கிளம்ப போகிறது பக்கத்தில் ஜென்னல் சீட்டில் யாரும் வரவில்லை (கண்ணா இரண்டு  லட்டு தின்ன ஆசையா!!)...
    

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

அமெரிக்கா - பயணத்திற்கு முன்தினம்

முன்தினம்

நாளை காலை பயணம், அதற்கு தேவையான உடைகளை தேடி, வெறும் மூன்று நாட்களுக்கு, அலமாரியே அலசிப்போட்டு, பயணத்திற்கு, அங்கு பொய் இறங்கியவுடன் இரவு உணவுக்கு, அடுத்தநாள் வேலைக்கு, மீண்டும்  இரவு உணவுக்கு , சுற்றிப்பார்க்க , திரும்பி வர என்று தனி தனியாக பிரித்தும் , எனக்கு நல்லதாய் நாலு dress இல்லை என்று புலம்பியும்  வீட்டில் இருப்பவர்களுக்கு பெரும் எரிச்சலை உண்டு பண்ணிக்கொண்டிருந்தேன், பாவம். டாக்ஸி புக் பண்ணலாமா, இல்லை ட்ரைன்ல போகலாமா, இல்லை மனைவியை விட்டுவிட சொல்லலாமா என்று ஒரு குட்டி பட்டிமன்றம் நடத்தி, டாக்ஸி க்கு  கொடுக்கிற காசு வைத்து அமெரிக்காவில் செலவு செய்யலாம் என்றும் , மனைவியையும் தொந்தரவு செய்யவேண்டாம் என்றும் அலசி ஆராய்ந்து கடைசியாக train லே போகலாம் என்று முடிவு செய்தேன். இருந்தாலும் அந்த நாளில் ரெண்டு மூன்று  தடவையாவது டாக்ஸிக்கு போன் பண்ணனும் போன் பண்ணனும் சொல்லி இன்னும் எரிச்சலை கூட்டினேன்.  வழக்கமாக இந்தியா போகும் போதும் விடுமுறைக்கு சுற்றுலா செல்லும் போதும் கடைசியாக தூங்கி அவசரமாக கிளம்பும் நான், அன்று சீக்கிரமே பெட்டியை கட்டிவிட்டு,  ஆறு மணிக்கு எழுப்பு என்று கூறிவிட்டு பத்து மணிக்கே தூங்க சென்றுவிட்டேன். இரவு முழுவதும் கண் மூடி இருந்தது அனால் மனதுக்குள் மட்டும் வெவ்வேறு நிகழ்வுகள் வேகமாக காட்சி மாறிக்கொண்டிருந்தன. அப்போது மணி ஆகிவிட்டது எழுந்திரி என்று உள் மனது சொல்ல, மூளை அதை நிராகரித்து இது மாயை இன்னும் அலாரம் ஒலிக்கவில்லை கண் திறக்காதே என்று ஆணையிட்டது, மீண்டும் காட்சிகள் மாறின   மீண்டும் அதே குரல் மீண்டும் நிராகரிப்பு  இவ்வாறாக பலமுறை நிராகரித்து கடைசியாக மூளையின் ஆணையை மீறி கண் திறந்து பக்கத்திலிருந்த அலைப்பேசியில் மணி பார்த்தேன் 2 : 30 , 3 : 41 , 4 : 20 , 4 : 41 , 5 : 10 , 5 : 21 கடைசியாக இந்த விளையாட்டுக்கு ஒரு முடிவுக்கட்டி எழுந்தே விட்டேன். ஆனாலும் நன்றாக தூங்கியதுபோல் உற்சாகமாக இருந்தேன்.

வியாழன், 11 அக்டோபர், 2012

தழும்புகள்



அதன் கதை நம்மை தெரிந்தவர்களுக்கு தெரியும், அதன் கதை தெரிந்தவர்களே நமக்கு தெரிந்தவர்களாக முடியும். நம்மை முதல் முறை சந்திப்பவர்கள் கண்ணில் அது படும், சிலர் உடனே கேட்டுவிடுவர், சிலர் எப்போது கேட்கலாம் என்று காத்திருப்பர், மற்றும் சிலர் அருகிலிருப்பவரிடம் கேட்பர் அதை தெரிந்துகொள்ளாமல் யாராலும் இருக்க முடியாது. அதை கேட்டவுடன் மிக துல்லிமாக எந்த வயதில், எந்த இடத்தில், யார் யார் சுற்றி இருந்தார்கள், நேரம், எப்படி நிகழ்ந்தது என்று விளக்கமாக கூறுவோம். பின் அவர்களும் அவர்களின் தழும்புகளை பற்றி பேசுவார்கள் அதே துல்லியத்துடன். இதுவே நம் உறவுகளை பலப்படுத்தும் ஒரு சக்தியாக இருக்கும்.

விளையாட்டில், விபத்தில்,
சண்டையில், திருவிழாவில், 
என்று தழும்புகளின் கதைகள் ஆயிரம்;
அதில் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆயிரம்,
அதுவே நமது அடையாளங்கள் ஆகிடும்.


அதே போல் நம் மனதிலும் சில தழும்புகள் யாருக்கும் தேரியாமல்....

சத்தமில்லாமல் ஒரு புரட்சி




நமது தமிழ் சினிமாவின் நாடித்துடுப்பாய் இருந்த ஒரு விஷயம், ஒரு காட்சியின் அழுத்தம், திரைக்கதையில் திருப்பம், கதாபாத்திரத்தின் குணாதிசயம்   எல்லாமே இதை சுற்றியே இருந்தது, அது  தாலி.  

கணவன் மீதுக்கொண்ட தீராக்காதலை காட்ட, (அவன் மிகவும் கெட்டவனாக இருந்தாலும்)  தினமும்  அதற்கு குங்குமம் வைத்து கண்ணில் ஒற்றிக்கொள்வதாக காண்பிக்கப்படும். 

மிகவும் துக்ககரமான காட்சி எதுவென்றால், கணவன் இறந்தபின் அலங்காரத்துடன் அழைத்துவந்து  அமங்கலிஆகும் காட்சி அதிலும் கடைசியாக தாலியை கழற்றி பாலில் போடும் காட்சி.

மிக கொடூரமான ஒரு கதாபாத்திரம் என்றால், பெண்  கழுத்திலிருந்து தாலியை பலவந்தமாக பறித்து எரியும் காட்சி, அது கணவனாக இருக்கலாம், மாமியாரை இருக்கலாம், பெண்ணின் தந்தையாக இருக்கலாம்.

கழுத்தில் ஒரு மஞ்சள் கயறு கட்டிக்கொண்டு, தங்க தாலியை கழற்றி கொடுப்பதும், அடகுவைப்பதும் என்று ஏழ்மையை காட்டி இருப்பார்கள்.

ஒரு பெண் புரட்சி புயலாக மாறுகிறாள், பொறுமை இழக்கிறாள், சுதந்திரம் பெறுகிறாள் என்பதை அந்த பெண்ணே, எல்லோரும் அதிர்ச்சிக்கொள்ள தன கையாலே தாலியை கழற்றி எறிகிறாள் என்று சித்தரித்து இருப்பார்கள், நமது திரைக்கதை ஆசிரியர்கள்.

தாலியை செய்வது என்பதே எவ்வளவு பயபக்தியுடன் செய்கிறார்கள், எப்படி செய்ய வேண்டும் என்பதையும் சில படங்களில் பார்த்திருப்போம். 

திரையில் மட்டுமல்ல, நிஜ வாழ்விலும். வரலக்ஷ்மி நோன்பு என்று கேள்வி பட்டிருப்போம், தாலி அணியும் முறைகளையும்  பலவிதங்களில் பார்த்திருப்போம் அல்லது தாலியை தவறாக அணிந்திருந்தாலோ, அணியாமல் இருந்தாலோ அவர்களை குறைகூருவதையும் கேட்டிருப்போம். ஆனால் இப்பொழுது அது பத்திரமாக வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் பத்திரமாக. இப்போது திரைப்படங்களிலும்  இதை மறந்துவிட்டனர், தொலைக்காட்சி தொடர்கள் கொஞ்சம் இதை கையில் எடுத்தாலும் அதே அளவுக்கு அதை மறக்கடிக்கவும் செய்கிறார்கள். தற்போது ஒரு சம்ப்ரதாயமாக இந்த திரு மாங்கல்யம் இருக்கிறது. இதுவும் மாறும்.  

எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல், ஊர்வலங்கள் இல்லாமல், எதிர்ப்புக்கள் இல்லாமல் இந்த புரட்சி நிகழ்ந்திருக்கிறது . சத்தமில்லாத  இந்த புரட்சிக்கு ஒரு பெரிய பங்கு மதிப்பிற்குரிய திருடர்களையும் சாரும்.  

இதுப்போல் சத்தமில்லாத புரட்சிகளில் சில குங்குமப்பொட்டு, மெட்டி, கோலம், பூ ...
 

வெள்ளி, 5 அக்டோபர், 2012

கணினி




நீங்கள் சொல்வதெல்லாம் செய்யும் 
நீங்கள் போகமுடியாத இடத்திற்கும்  அழைத்து செல்லும் 
நீங்கள் கேட்பதை உங்கள் கண்முன் நிறுத்தும் 
அலாவுதினின் ஜீபூம்பா போல 
அதன் முன் நீங்கள் சிரிப்பீர்கள், அழுவீர்கள் 
கோபம் கொள்வீர்கள், உற்சாகம் அடைவீர்கள் 
என்றேனும் மக்கர் பண்ணால், மீண்டும் 
MIB போல் flash செய்து, எல்லாவற்றையும் மறக்கடிக்கலாம்
அதுவும் "என்னது காந்தி செத்துட்டாரா" என்று மீண்டும் முதலிலிருந்து வரும்
உங்கள் ஞாபகங்கள் சேகரிக்கும், உங்கள் ஞாபகங்களை தொலைக்கும் 
அப்படி ஒரு நண்பனையே நாம் தேடுகிறோம் நிஜ வாழ்க்கையில் 

இதற்கு சுஜாதாவின் பதில் இப்பிடி தான் இருக்கும் 
இதெல்லாம் ஒரு கவிதை !!!

"என்னய்யா விளையாடுகிறீர்களா "  - சுஜாதா அகோபர் 1972 கணையாழியின் கடைசி பக்கம் 

அறி'வாலி'யின் ஐடியா - 1


கொஞ்ச நாளா, வாரமா, மாசமா இல்ல வருஷமா எல்லோரும் பேசுற ஒரு விஷயம், பூமி வெப்பமயம் அடைஞ்சிடுச்சு, அதுக்கு காரணம் காற்று மாசுப்பாடு  என்றுதான்  இருக்கு. அதுக்கு தீர்வுகள்ன்னு நிறைய மாநாடு எல்லாம் போட்டு வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், மரங்களை வெட்டாமல் இருப்போம், புகை கக்கும் வாகனங்களை குறைவாய் பயன்படுத்துவோம் அப்பிடி இப்பிடின்னு நிறைய சொல்லிட்டாங்க. எல்லாம் சரி ஆனா இப்போ  பிரச்னை என்னவென்றால், நாம் எல்லா  விஷயத்தையும் வேகமா செய்தே   பழக்கப்பட்டதால, நாம்  நட்ட மரம் வளர்வதுக்குள்ளே காற்றை இன்னும் பல மடங்கு நாசமாக்கிடுவோம்.  நம்ப மெதுவா மாசுபடுத்தி இருந்தாலோ, இல்லை முன்னாடியே யோசிச்சு இருந்தாலோ அதை பொறுமையா சரி செய்யலாம். அதனால இப்போ அவசரமான  ஒரு தீர்வு தேவை படுது. 

அதுக்கு என்னுடைய மண்டையில உதிச்ச ஒரு ஐடியா, நம்ப கிட்ட நிறைய பணம் இருக்கு வான்வெளிக்கு நிறைய செலவு செய்றோம், இந்த மரபணு  மாற்றப்பட்ட உயிரனம் ம.மா.உ (GMO - Geniticaly modified Organism )   என்கிற தொழில் நுட்பமும் இருக்கு , இந்த தொழில் நுட்பம்  சரியானதா, ஆபத்தானதா என்ற ஒரு விவாதத்துக்கு பிறகு வருவோம். முதலில் ம.மா.உ பற்றி பார்ப்போம் . ஒரு செடியின் விதையில் ஒரு சில மரபணுக்களை மாற்றம் செய்து பல மடங்கு மகசூல் தரும் ஒரு வித்தை தான் இது, இதற்கு அயல் நாடுகளில் பயங்கிரமான எதிர்ப்பு உள்ளதால் நம்ப ஊர்ல சோதனை செய்றாங்க(ஏன்னா நாம ரொம்போ நல்லவங்க, நிறைய காசு பாக்கலாம் என்று  எவ்ளோ ஏமாத்தினாலும் நம்புவோம் ), இதனால பாதிக்க பட்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் பற்றி நமது செய்தி தாள்களில் "கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை" என்று படித்து இருப்போம். இந்த தொழில் நுட்பத்தை தற்போது மேலை நாடுகளில் எண்ணெய் உற்பத்திக்கு பயன்பாடாக உள்ள செடிகளையும், விலங்கினங்களுக்கு உணவாக தேவை படும் பயிர் வகைகளையும் வளர்க்க பயன்படுத்துகிறார்கள். சரி நாம விஷயத்துக்கு வருவோம் இந்த அறிவியல் வளச்சியை   நாம் அப்படியே மரங்களின் இலைகளை பெரிதாக்கவும், அது அதிகமாகவோ அல்லது வேகமாகவோ  CO2 உரியவும் மாற்றி அமைத்தால் ஒரு பலன் கிடைக்குமே.

அப்பிடி பண்ணா நிலத்தடி நீரும் சீக்கிரம் காலி ஆகிவிடும், அந்த மரத்துக்கு பக்கத்துல ஒரு புல் பூண்டு கூட முளைக்காது, இது முடியாது, ஆபத்தானது என்று வைத்துக்கொண்டால், இன்னொரு ஐடியாவும் இருக்கு, இந்த இயற்கை நமக்கு காட்டிகொடுத்த ஒளிசெர்க்கை(photosynthesis) முறையை செயற்கை முறையில்   செய்தால்  என்ன , அதை எல்லா விளக்கு கம்பங்களிலும், வாகனகளிலும், வீடுகளிலும் வைத்தால் என்ன? ஒரு Air Purifier போல. 

கண்டிப்பாக எல்லா கண்டுபிடிப்பிலும் ஒரு ஆபத்து இருக்கத்தான் செய்யும். விமானம் கீழே விழுந்துவிடும், கப்பல் மூழிகிவிடும் என்று சொல்லி இருந்தால் ஏதுவும் கண்டுபிடித்திருக்க முடியாது. அந்த ஆபத்துக்கும் முன்கூட்டியே ஒரு தீர்வும் கண்டுபிடித்தால் ஒழுங்காக இருக்கும். 

Society needs both optimists and pessimists. The first invented the airplane while the second invented the parachute.


உடனே ஒரு கும்பல், எனக்குள்ளே இருக்கும் ஒருவனும் கூட சேர்ந்து  டேய் உன் மண்டையில் தோன்றியது யாருக்கும் தோன்றி இருக்காதா, பொய் வேலை எதாவது இருந்தா பார் என்று கத்துவது நன்றாகவே கேட்கிறது. எதோ சொல்லனும்ன்னு தோணிச்சு சொல்லிட்டேன்.

சிறை பறவையின் நேரடி அனுபவம்

தினமலரில் நேற்று ஒரு பேட்டி ஒன்று படித்தேன். படித்தவுடன் மனதுக்குள் ஒரு எண்ண ஓட்டம். எல்லோருக்கும் அன்றாட வாழ்க்கை மீது ஒரு பார்வை உண்டு, அவர்கள் பார்வையில் சந்தோசமும் நரகமும் எவ்வாறு 
மாறுபடுகிறது என்பதும் இந்த பேட்டியில் பன்னீர்செல்வம்  நம்ப George Cloonny   ஸ்டைலில் What else? என்று கேட்பது உணர முடிகிறது.

உங்களுக்கு அதுபோல் எதுவும் தோன்றவில்லை என்றால், அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

இதோ உங்களுக்காக


அவருடன் பேசியதிலிருந்து...

எதற்காக காவல் நிலையத்தில் உட்கார்ந்து இருக்கிறீர்கள்?

திருட்டு பயல போலீசு புடுச்சா, காவல் நிலையம் தான் கதி.

உங்களை பார்த்தால் அப்படி தெரியவில்லையே...
உங்க வீட்டில் சைக்கிள் இருக்கா, அது காணாமல் போனா நான் யாருன்னு உங்களுக்கு தெரிந்துவிடும்.

சைக்கிள் மட்டும் தான் திருடுவீர்களா?
மத்த பயலுக மாதிரி, பெரிய, பெரிய சமாச்சாரமெல்லாம் நமக்குத் தெரியாது; அது தேவையும் இல்லை. வீட்டுக்கு முன்னாடி பித்தளை பாத்திரம், இரும்புச் சட்டி, சைக்கிள திருடி விற்கிறதுக்குள்ள நான் படுறபாடு உங்களுக்குத் தெரியாது.

திருடுவது தவறு என்று தெரியவில்லையா?
சின்ன வயதில் இருந்து திருடுவதால் தவறு என்று தோணவில்லை. ஆரம்பத்துல பயமாத்தான் இருந்தது. இப்ப பழகிப்போச்சு...

எத்தனை வயதில் இருந்து...
விருகம்பாக்கம் ஏரி கரைதான் நான் பிறந்து வளர்ந்தது. படிப்பு ஏறல. பத்து வயசுல திருட ஆரம்பிச்சேன். இப்ப நாற்பது ஆகுது. திருடிக்கொண்டே இருக்கிறேன்.

வேலைக்கு போகக்கூடாதா?
நல்லா இருக்கே உங்க கேள்வி. என்ன பற்றி கேள்விபட்ட யாராவது வேலை கொடுப்பாங்களா? தினமும் குடிக்க வேண்டும். அதற்காக திருடுகிறேன்.

குடிப்பழக்கம் திருடனாக்கி விட்டது என்கிறீர்களா?
என் வாழ்வில் பட்ட அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன். உங்க காலில் விழுந்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். யாரும் குடிக்காதீங்க. சின்ன வயசுல நண்பர்களுடன் குடிக்க ஆரம்பித்தேன். அதன் பின் 24 மணி நேரமும் போதையில்தான் இருப்பேன். யாருகிட்டேயும் சண்டைக்கு போகமாட்டேன். வாயில் இருந்து வரும் வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியாது. குடிக்கு அடிமையானதால், மனைவி பிரிந்து விட்டாள். அந்த சோகமும் வாட்டி வதைக்க, மேலும் குடிக்க ஆரம்பித்தேன். வயிறு பட்டினி கிடந்தாலும், மண்டைக்குள்ள போதை இருக்கணும். குடிக்க கையில் காசு இருக்காது. ஆனால், குடிக்க வேண்டும்; என்ன செய்வது. அதனால், திருட ஆரம்பிதேன்.

முதல் திருட்டு அனுபவத்தை சொல்லுங்கள்...
விருகம்பாக்கத்தில், சைக்கிளில் ஒருவர் வேலைக்கு சென்று வருவார். அவர் எங்கெல்லாம் போகிறார். சைக்கிளை எந்த இடத்தில் நிறுத்துகிறார் என்பதை தொடர்ந்து நோட்டமிட்டேன். அவர் கண்ணயர்ந்த சமயம் பார்த்து திருடி விட்டேன். குடிகாரனாக இருந்தவன் திருடனாகி விட்டேனே என, நினைத்து அன்று இரவு தூக்கமே வரவில்லை. சைக்கிள் விற்ற காசு தீர்ந்து போனதும், மீண்டும், மீண்டும் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்தேன். ஒரு நாள் போலீசில் மாட்டிக் கொண்டேன்.

சிறைக்கு சென்ற அனுபவம்?
சிறைக்கு போவதும், வருவதுமே வாழ்க்கையாகிப் போனது. மத்திய சிறையில் காலடி எடுத்து வைத்தபோது, அடிப்பார்களோ என, பயமாகத்தான் இருந்தது. பெரிய, பெரிய ரவுடிகள் இருப்பார்கள், அவர்களிடம் மாட்டிக் கொண்டு உதைபடப் போகிறோம் என்று தான் நினைத்தேன். மத்திய சிறை கொடுமையானது தான், சும்மா சொல்லக்கூடாதுங்க, புழல்சொர்க்கம். மணியடிச்சா சாப்பாடு, வாரத்தில் ஒரு நாள் கோழிக்கறி, உள்ளேயே கால்பந்து விளையாட்டு என, பொழுது போகும். சிறை அதிகாரிகள் அன்பானவர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளிகளாகி விட்டவர்களை திருத்தும் மிக அற்புதமான இடம் அது.சிறை ரவுடிகள் பற்றி சொல்லுங்கள்பன்னீர்செல்வம் ரொம்ப "ஜாலி'யான ஆளு. அதனால ஆடச்சொல்லி, பாடச்சொல்லி கேட்பாங்க. சிறைக்குள் தனிமையில் அழுகிற ரவுடிகளை பார்த்து இருக்கிறேன். அவுங்களுக்கு பயம் அதிகம். அதனால் தான் கத்தியை மூன்றாவது கைபோல் பாவித்து வரு கிறார்கள். கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவுன்னு அவுங்களுக்கும் தெரிகிறது.

அங்கு என்னவெல்லாம் கிடைக்கிறது?
பெண்ணைத் தவிர எல்லாம் கிடைக்கும். கட்டு கட்டா துட்டு செலவு செய்தால், சகலவிதமான வசதிகளுடன் இருக்கலாம்.

இரண்டு பீடி கட்டுகள் தானே சிறைக்குள் அனுமதி?
மனுவுல வருபவர்கள் இரண்டு பீடி கட்டு தான் கொண்டு வர வேண்டும். என்னைப் போன்று இருப்பவர்களுக்கு துண்டு பீடி கூட கிடைக்காது. அதற்காக, பீடி உள்ளவர்களை சுற்றி பெரும் கூட்டம் வட்டமடித்துக் கொண்டே இருக்கும். அவுங்க சொல்கிற வேலையெல்லாம் கேட்கணும். துணி துவைத்து தந்தால், ஒரு பீடி கொடுப்பாங்க. அந்த பீடியில், ஸ்டிக்கர் வரை குடித்தால் அரை நாள் ­­தாங்கும். விரல் பிடிக்கும் பகுதி வரை குடித்தால் ஒரு நாள் ஓடிப்போகும். அடுத்த பீடி கிடைக்கும் வரை, துண்டு பீடியை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியது தான்.

கஞ்சா எப்படி வருகிறது?
அலைபேசி வழியில் வியாபாரம் முடிந்து விடுவதால், சிறைக்கு பின்புறத்தில் இருந்து, இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டு இருப்பவர்கள், ரப்பர் பந்தை சிறைக்குள் வீசுவார்கள். அதில் இருக்கும் கஞ்சா பொட்டலத்தில், இது இன்னாருக்கு என்பதற்கான அடையாளம் இருக்கும். அதை வேறு யாரும் எடுக்க மாட்டார்கள். சிறை கண்காணிப்பாளரிடம் மாட்டிக்கொண்டால், தனிமை சிறையில், போட்டு விடுவார்கள். சாப்பிடுவது, மலம் கழிப்பது எல்லாமே அங்கே தான். அந்த சிறைக்கு மட்டும் போகவே கூடாது.

"சிம்' கார்டெல்லாம் வைத்திருப்பார்களா?
கழிப்பறை பீங்கானை அடியில் அறுத்து, அதில் சிம்கார்டு பதுக்கி வைத்திருப்பார்கள், அலைபேசி இருக்கும் இடம் யாருக்குமே தெரியாது. சிறை வாசிகள் கண்களாலேயே பேசிக்கொள்வார்கள். தலையில் கை வைத்தால், வீட்டுக்கு பேச வேண்டும் என, அர்த்தம். அதன்படி அலைபேசி உரையாடலுக்கு ஏற்பாடுகள் நடக்கும்.

சிறையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அது சொர்க்கம். மணியடிச்சா சோறு, வாரம் தோறும் சிக்கன். உடல் நிலை சரியில்லை என்றால், பேருந்து பிடித்து மருத்துவரைத் தேடி அலைய வேண்டியதுஇல்லை. அங்கேயே மருத்துவ மனை இருக்கிறது. மனமும், உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.

வெளியில் இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?
வெளியில் இருப்பது பிடிக்கவே இல்லை. எந்த சைக்கிளை பார்த்தாலும், திருடலாமா என்று தான் நினைக்க தோன்றுகிறது. அழுக்குபடிந்த ஆடையுடன் அலைய வேண்டியுள்ளது. சிறையில் அப்படி அல்ல. தும்பை பூ போல் தூசி படியாமல் இருக்கலாம். திருந்துவதற்கு சிறை மிகவும் அற்புதமான இடம்.

திருந்த மனம் இல்லையா?
போலீசு மனது வைத்தால், சிறைக்குள் போய் விடுவேன். நான் வளர்த்த செடிகள் எல்லாம் எப்படி இருக்கிறதோ தெரியவில்லை.இவ்வாறு பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

சனி, 29 செப்டம்பர், 2012

வெண்பா ?



தட்டி தட்டி மேலே ஏற்றுகிறாய் 
மீண்டும் மீண்டும் கீழே விழுகிறேன் 
புவிஈர்ப்பு விசை மட்டும் காரணமில்லை 
உன்  விரல் தொடவே 

<அடி> = சீர் சீர் சீர் சீர்
<அடி> = சீர் சீர் சீர் சீர்
<அடி> = சீர் சீர் சீர் சீர்
<ஈற்றடி> சீர் சீர் ஈற்றுச்சீர் 

தட்+டி தட்+டி மே+லே ஏற்+றுகி+றாய் 
தேமா தேமா தேமா கூவிளங்காய் 
நேர்+நேர் நேர்+நேர் நேர்+நேர் நேர்+நிறை+நேர் 


மீண்+டும் மீண்+டும் கீ+ழே விழு+கிறேன் 
தேமா தேமா தேமா கூவிளம் 
நேர்+நேர் நேர்+நேர் நேர்+நேர் நேர்+நிறை

புவி+ஈர்ப்+பு விசை மட்+டும் கா+ரண+மில்+லை 
தேமாங்காய்  நிறை தேமா ????????
நேர்+நேர்+நேர்  நிறை நேர்+நேர்  நேர்+நிறை+நேர்+நேர்

உன் விரல்  தொட+வே
நேர் நிறை பிறப்பு 
நேர்  நிறை  நிறை+நேர் 





வியாழன், 27 செப்டம்பர், 2012

பிரியாவிடை



கருத்தமேகம், குறைத்தஒளி, வாடைக்காற்று,
அறிகுறிகள் அனைத்தும் சொல்கிறது
இது பிரியும் காலம், விடைக்கோடு
இத்தனை நாள் எமை சுமந்தாய்,
நிலத்திடை உறம் பிரித்தாய்,
நிலத்தடி நீர் எடுத்தாய், அன்னையே
விடைபெறுகிறோம், விடைக்கோடு


எனில் துளிர்த்து,
என் உயிர் வாழ்வின் ஆதாரங்களே  
வர்ணங்கள் பலதந்து,
என் வசந்தத்தின் தொரனங்களே
மகிழ்வாய் விடைப்பெறுங்கள்.

ஒளியிடை சக்தி பிரித்தீர்கள்
காற்றியிடை களங்கம் கலைந்தீர்கள்,
உணவு சமைத்து என்னை வளர்த்தீர்கள் 
தென்றலாய் பலரின் வியர்வை துடைத்தீர்கள்,
நிழலாய் பல உயிர்க்கு அடைக்கலம் கொடுத்தீர்கள்,
நிம்மதியாய் விடைப்பெறுங்கள்.

புயலை எதிர்த்தீர்கள் 
மழையில் நினைந்தீர்கள் 
வெயிலில் காய்ந்தீர்கள் 
கடமை புரிந்தீர்கள் 
பெருமைக்கொள்கிறேன் விடைப்பெறுங்கள்.

மலர்



மலர்ந்துவிட்டேன், 
இனி செய்வது என்ன?
ஏதும் செய்யாமல் இரு,
மாலை வரை காத்திரு. 

ஒரு சிறு குழந்தை, 
உன் காம்பு கிள்ளும், 
அப்போதும் சிரித்திரு. 

வண்டு வந்து வட்டமிடும், 
உள்ளிருந்து தேன் உறிஞ்சும், 
அப்போதும் சிரித்திரு. 

தென்றல் வந்து, உன் 
வாசம் திருடிச்செல்லும், 
அப்போதும் சிரித்திரு. 

யாரோ ஒருவன், உனை
பார்த்து மகிழ்ந்திருப்பான், 
என்று மட்டும் நினைத்திரு. 

மனநிறைவோடு மாலை வந்ததும் 
மகிழ்வோடு மரித்திடு.

தண்டவாளம்




நம்மை பிரிக்கும் 
காரணங்கள் ஆயிரமாயினும்
என்னருகே நீ இருப்பதால் 
எதற்கோ காரணமாகிறோம் 

புதன், 26 செப்டம்பர், 2012

கல்

உளியின் முதலடி பட்டதும் 
கல் கேட்டது, சிற்பியே, 
என்னை செதுக்க போகிறாயா ?
என்னவாய் செதுக்க போகிறாய் ?
அழகாய் செதுக்குவாயா? 

அவசரமாய் செதுக்காதே,
உன் உளி தடுமாறக்கூடும்.
அரைகுறையாய் செதுக்காதே,
நிர்கதியாய் நின்றுவிடும்.

கடவுளாய் செதுக்காதே 
சண்டைகள் வரக்கூடும்.
அலங்காரங்கள் செய்து, 
உன் கலையை மறைக்க கூடும். 
அனுமதி சீட்டு போட்டு,
பலரை அனுமதிக்காமல் 
போகக்கூடும். 

தான தலைவனாய் செதுக்காதே, 
பறவைகளின் எச்சத்தில் குளிப்பேன்,
பொய்களின் உச்சத்தில் மிதப்பேன் .

சிற்பியே, முடித்துவிட்டாயா?
நீ செதுக்கிய படிக்கல் எங்கே?

சிற்பியே, என் கூர்மையான 
முனைகளை மழுப்பிவிடு.
காயப்பட்டது,
நான் மட்டுமாக இருக்கட்டும்.

மாற்றம்



தெரிந்தே மாறுகிறோம் 
இல்லை மாறியப்பின்
தெரிந்து கொள்கிறோம் 
நமக்காக மாறவில்லையென்று

தெரிவதேயில்லை 
ஏன் மாறினோமென்று,  யாரும் 
நமக்காக மாறவில்லையென்றும் 

நித்தமும் மாறிகொண்டிருக்கிறோம்
அரசியல்வாதி பேச்சு போல 

அடையாளம் இழக்கிறோம்.

உனக்கு...




உனக்கு தெரியாது...
உன் பார்வையில் என்னுள் 
ஏற்படும் வேதியல் மாற்றம்.
உன் நிழலில் நான் பெரும் 
பெரும் உஷ்ண ஏற்றம்.

உனக்கு கேக்காது ...
உன்னருகே நானிருக்கையில் 
என் மூச்சுக்காற்றின் வேகம் 
நீ பேசும் பொது 
என் இதய துடிப்பின்  சப்தம் 

உனக்கு புரியாது ...
நான்  வடிக்கும் கவிதைகள் 
உனக்காக  என்று 

சனி, 22 செப்டம்பர், 2012

மாப்பிள்ளை




Facebook ல இது போல ரெண்டு மூணு post பார்த்தேன், feminist க்கு எதிர்பதம் என்னவென்று தெரியவில்லை. மேலே உள்ள வரிகளை படித்தவுடன் எனக்கு மூன்று நிகழ்வுகள் ஞாபகம் வருகிறது;

1. வெளிநாட்டில் இருந்து தாய்நாட்டிற்கு திரும்பும் ஒருவர் உண்மையான அன்போடு தன்  உறவினர்களுக்கு அன்பளிப்புக்கள் வாங்கி செல்கிறார். சில வருடங்கள் கழித்து ஊர் திரும்பும் ஒருவர் முன்னவர் போல் அதிகம் கொண்டு செல்லாத பொது அவர் தூர படுகிறார். இது பின் ஒரு வழக்கமாக மாறி ஊர் திரும்பும் அனைவரும் தன்  உறவினர்களுக்கு அன்பளிப்பு கண்டிப்பாக வாங்கி  வரவேண்டும் என்று மாறியது.

2.வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பும் சிலர் அங்கே கிடைக்காத உண்மையான  சுவை கிடைக்காத மீன் சாப்பிட ஆசைப்பட்டு தன் மற்ற செலவுகளுடன் சேர்த்து மீனுக்கும் அதிகம் கொடுத்து வாங்கி உண்டு, தன் சொந்த மண்ணின் உணவை அதிக விலை கொடுத்து அனுபவித்து கொள்கின்றனர் , பின் இது பழக்கமாகி மீன் விலை என்னவென்றாலும் வாங்க ஆள் இருக்கிறார்கள் என்று எல்லா விலையும் எகிறுகிறது.

3.என்றோ ஒரு மிகவும் அன்பான தந்தை, தன் மகள் மீது வைத்த அளவுகடந்த  அன்பால் அவள் திருமணதிற்கு பிறகு எந்த விதத்திலும் துன்ப படகூடாதென்று அள்ளி கொடுத்து அனுப்பி வைத்து பின் அதுவே பெண் பெற்றோர் கண்டிப்பாக தன் மகளுக்கு திருமணத்தின் பொது கொடுத்து அனுப்பவேண்டும் என்றாகியது.


இதில் யார் செய்தது தவறு, பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ?


திங்கள், 10 செப்டம்பர், 2012

யார் வகுத்த நியதி


உலகில் தோன்றிய எல்லா உயிர்களுக்கும் அதன் மறைவு வரை இரண்டே விதி தான் தற்காத்து கொள்வதும், இனவிருத்தி செய்வதும்
இதில் மனிதனுக்கு மட்டும் 
நீதியும், அநீதியும், பாவமும், பழியும் யார் வகுத்தது 
பெயரும், புகழும், செல்வமும், ஏழ்மையும் யார் வகுத்தது 
மொழியும், இனமும், மதமும், கடவுளும் யார் வகுத்தது 
ஆடையும், அணிகலனும், அலங்காரமும், ஆசையும் யார் வகுத்தது 
கல்யாணமும், சிசுக்கொலையும், கருத்தடையும் யார் வகுத்தது 
படுகொலையும், பதவியும் யார் வகுத்தது 
குற்றனர்ச்சியும், காழுப்புனர்ச்சியும் யார் வகுத்தது
உலகின் எல்லா உயிர் போல நானும் ஒரு சின்னஞ்சிறு உயிர் மட்டுமே.
இதில் மனிதனுக்கு மட்டும்  ஏன்?

எதிர்மறை வாழ்க்கை !



அழுகை வருகையில் சிரிக்கவும் 
சிரிப்பு வருகையில் அழவும் 

பசிக்காமல் புசிக்கவும் 
பசிக்கையில் புசிக்காமலும்

விளையாட நினைக்கையில் படிக்கவும் 
படிக்க நினைக்கையில் விளையாடவும் 

விழித்திருக்க விரும்பையில் தூங்கவும் 
தூங்க விரும்பையில் முழிக்கவும்

காதல் வரும்போது மறுக்கவும் 
மறுக்க வரும்போது காதலிக்கவும் 

சேர நினைக்கையில் பிரியவும் 
பிரிய நினைக்கையில் சேரவும் 

நினைக்க கூடியதை மறக்கவும் 
மறக்க கூடியதை நினைக்கவும் 

கோபம் வருகையில் மன்னிக்கவும் 
மன்னிக்க நினைகையில்  கோபம் கொள்ளவும் 

சாக நினைக்கையில் வாழவும்
வாழ நினைக்கையில் சாகவும் வேண்டும், 

இதில் ,

நினைத்தது போல் நடந்துவிட்டால் 
அதுவே நன் நினைவுகள் 
நினைப்பது போல் நடந்துவிடாதா 
என்பதே நம் கனவுகள் .

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

Facebook



உனக்கு பிடித்ததேர்க்கெல்லாம் Like போட்டாய் 
உன்னை பிடித்ததால் எல்லாத்துக்கும் Like போட்டேன்

தாய்




பிறந்தது முதல் 
உன்னை தாங்கியவள் 
நீ எட்டி மிதித்தபோதும் 
உன்னை சகித்தவள் 
உன் தாய் 

மீண்டும் உன் தாய் மடியில் 
அவள் கருவுவில் 
புகுந்திட நினைத்தால் 

தாய்க்குள் திரும்பும் அதிசயம் 
எல்லோருக்கும் நடக்கும் 
பூமி உன்  தாயென்றால் 

இல்லாவிட்டாலும் ...

Facebook




உனக்கு பிடித்ததேர்க்கெல்லாம் Like போட்டாய் 
உன்னை பிடித்ததால் எல்லாத்துக்கும் Like போட்டேன்

நான்



எனை  கொல்லும்  என்னை, 
யாரிடம் காட்டிகொடுப்பேன் 

என்னோடு உன்வாசம், 
நிரந்தர வாக்குவாதம் 

வெல்லவும் முடியவில்லை, 
கொல்லவும் மணமில்லை

சொல்லிடவில்லை யாரிடமும்,
வெறுத்திடகூடும் என்னை 

நீ,

எனக்குள் இருக்கும்,
என்னுயிர் எதிரி.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

உலகம்


கண் முன்னே வந்து நிற்கிறாய் 
காணமல் போகிறாய் 
நீ நின்ற நொடி மட்டும் 
நீக்காமல் இருக்கிறேன் 

உலகம் படைக்க ஒருவார்த்தை போதுமென்று 
உன் வார்த்தையில் உணர்கிறேன் 
தனியுலகம் ஒன்றை படைக்கிறேன் 
அங்கேயும் உன் நிழலே நிலா

கனவில் மிதக்கிறேன், கவிதைகள் படிக்கிறேன் 
சுகம் கண்டதால் மீண்டும் சுவைக்கிறேன் 
அந்த நொடி மீண்டும் சுரக்கிறேன் 
மீண்டும் என்னுலகம் நுழைகிறேன் 

சனி, 11 ஆகஸ்ட், 2012

எரி நட்சத்திரம்



அமெரிக்கா - பிரான்ஸ் கூடை பந்து இறுதி ஆட்டம் நடந்துகொண்டிருக்க அமெரிக்கா தான் வெற்றி பெரும் என்று தின்னமாய் தெரிந்தாலும், மனதிற்குள் பிரான்ஸ் வெற்றி பெறாத என்ற ஒரு சின்ன ஆசையுடன் வெளியே வந்து வானத்தை பார்த்து கொண்டிருந்தேன். ஒளி மாசுபாட்டலும்   , அங்கங்கே சிறு மேகங்களிடையே நட்சத்திரங்கள் சிறிதாய்  மின்னுவதை பார்த்ததும் இன்று நட்சத்திர இரவென்றும், அதிகமான எரிநட்சத்திரங்கள் விழும் என்றும்  இணையத்தில் படித்தது ஞாபகத்தில் வந்தது, நட்சத்திரங்களையும் , வினூர்தி அசைவுகளையும் பார்த்து கொண்டிருந்தேன், சட்டென்று  சீறி பாய்ந்தது ஒரு எரி நட்சத்திரம். எரி நட்சத்திரம் வரும்போது நாம் மனதில் எது நினைத்தாலும் நடக்கும் என்று ஒரு நம்பிக்கை இருப்பதால், அது மறைவதற்குள் ஏதேனும் நல்லதாக நினைக்க எண்ணி தேடி பிடிப்பதற்குள் மறைந்தே போனது எரி நட்சத்திரம்.

இது என்ன முட்டாள் தனமான மூட நம்பிக்கை, நான் பிரான்ஸ் வெற்றி பெறவேண்டும் என்று நினைத்திருந்தால் பிரான்ஸ் வெற்றி பெற்றிருக்குமா? என்று என்னையே கேள்வி கேட்டுகொண்டிருந்தபோது எனக்குள் தோன்றிய பதில் இது தான்.

எந்த ஒரு விஷயத்தை நம் ஆழ் மனதில் அடிக்கடி சொல்கிறோமோ, அல்லது நாம் எதன் மீதி தீரா பற்று வைத்திருகிறோமோ அதுவே எரி நட்சத்திரம் வரும் முன்னும் , வரும்போதும் , சென்ற பின்னும் நம் மனதில் இருக்கும், அப்படி எல்லா நொடியும் நம் மனதில் இருக்கும் எந்த ஒரு இலக்கும் கண்டிப்பாக நிறைவேறும்.

நாம் மூட நம்பிக்கை என்று நினைக்கும் நம் முன்னோர்களின் எந்த ஒரு பழக்கமும் ஒரு ஆழ்ந்த கருத்தை உள்நிருத்தியே அமைந்துள்ளது என்று தோன்றியது.

செவ்வாய், 22 மே, 2012

நீ நான்: நீயில்லையென்றால்

நீ என்றும் என் நினைவில்
          நிலவின் கறைப்போல
நீயில்லையென்றால்
         வேறுமையாவேன்

நீ என்றும் என் நினைவில்
          கடலின் நீர்போல
நீயில்லையென்றால்
          பாலைவனமாவேன்

நீ என்றும் என் நினைவில்
          நிழல் தரும் மரம்போல
நீயில்லையென்றால்
          வாடிபோவேன்

நீ என்றும் என் நினைவில்
          நிஜமான நிகழ்வுபோல்
நீயில்லையென்றால்
         வெறும் கனவாவேன்

நீ என்றும் என் நினைவில்
         வங்கியின் நிதிபோல
நீயில்லையென்றால்
         முடங்கிபோவேன்

நீ என்றும் நீங்காதடி
 நீயில்லையென்றால்
என் இதயம் தாங்காதடி
 

சனி, 19 மே, 2012

இன்று - காட்சி I

ஆள் நடமாட்டமே இல்லாத சென்னை ஸ்டேர்லிங் ரோடு, அதிசயமாக அன்று தெருவிளக்குகள் மஞ்சள் தூவி கொண்டிருந்தன, தெரு முனையில் ஒரு வங்கியின் விளம்பர பலகை தெரு மஞ்சள் நீக்கி பவுடர் போட்டது போல் வெள்ளை வெளிச்சம் பூசி இருந்தது. உள்ளே பாதி தூக்கத்தில் பாதுகாவலர் வளம் முடித்து அறிக்கை ஏட்டில் கையெழுத்திட்டு மணி பார்த்தார் மணி 3 ௦௦. அதே சென்னையில் அந்த நேரத்திலயும் பரபரப்பாய் தாம்பரம் ரயில்வே நிலையம், அதன் அருகே ஒரு குடியிருப்பில் , அருண் ரயில்வே துறை அதிகாரி என்ற பெயர் பலகையும், சங்கீதா வங்கி மேலாளர் என்ற பலகையும் வீட்டின் வாசலை அலங்கரிக்க அமைதியாய் ஒரு வீடு, உள்ளே நுழைந்ததும் விசாலமான, உயரமான சாலறை, சுவரில் அங்காங்கே அருண் சங்கீதா தம்பதியர் புகைப்படம் தொங்கி கொண்டிருந்தது, இது தவிர அழகான குழந்தைகள் படமும் நிரம்பி இருந்தது. அருண் கீழே ஒரு அறையில் உறங்கிகொண்டிருந்தார். மாடியில் ஒரு பெரிய அறையில் தொலைக்காட்சி பெட்டி அனைக்கபடாமல், ஜென்னல் பாதி துறந்திருக்க, பெரிய கட்டில் காலியாய்  இருக்க  தலையனை துணையுடன் தரையில் சங்கீதா உறங்கிகொண்டிருந்தார் மணி 3 .30 . சென்னையின் இன்னொரு மூலையில் தி நகரில் ஒரு மாடி வீட்டு மொட்டை மாடியில் ஒரு சிமெண்ட் ஓடு போட்ட ஒரு சிறிய வாடகை வீடு, உள்ளே  சத்தம் அதிகமாகவும், காற்று இதமாகவும் தந்து கொண்டிருந்த மின்விசிறி,  ஒற்றை கட்டிலில் ஒருவன் விடுதலை காற்றை சுவாசித்துகொண்டிருந்தான், எதிரே உள்ள மிக பெரிய விளம்பர பலகையில் காட்டியது மணி 4 ௦௦. பேப்பர் போடுபவர்களும், பால் போடுபவர்களும்,டியூஷன் செல்லும் மாணவர்களும் தெருவை மெதுவாய் ஆக்ரமிக்க தொடங்கிக்கொண்டிருக்க  நுங்கம்பாக்கத்தின் ஒரு தெருவில்  லக்ஷ்மி இல்லம் என்ற பெயர் தாங்கிய ஒரு அழகிய வீடு, புதிதாய் கட்ட பட்ட வீடு என்பது பார்த்ததும் தெரிகிறது, உள்ளே நுழைந்ததும் ஒரு அழகிய பெண்ணின் போட்டோ நம்  பார்வையை கவரும், வாடாத மாலையும் அணையாத விளக்கும் அவள் இறந்து சில நாட்கள்தான் ஆகியுள்ளது    என்று தெரிகிறது, மாடியில் ஒரு பொம்மையை கட்டிபிடித்தபடி உறங்கிகொண்டிருந்தாள் ஒரு சிறய அழகு தேவதை, இன்னொரு அறையில் இரண்டு நாள் தாடியுடன், சோகம் முகத்தில் தெளிவாய் தெரிய உறக்கம் வராமல் பிறண்டு கொண்டிருந்தான்  அந்த அழகு தேவதையின் தந்தை, அவனுடைய  அறையுலும் அதே  போட்டோ, கூடவே குடும்ப படங்களும் , குட்டியின் படங்களும் நிரம்பி இருந்தன அதன் நடுவே ஒரு அழகிய கடிகாரம் மணி 4 30 .   பறவைகளும், மாணவ சிட்டுகளும் சுறுப்பாக வேலை துடங்கிவிட்ட  நிலையில், டி கடையில் பேப்பர் , டி வியாபாரம் சூடு பிடிக்க, இட்லி கடை திறந்துகொண்டிருக்க, கோடம்பாக்கத்தில் தற்போதைய மிகவும் புகழ் பெற்ற நடிகையின் வீடு அவர்தான் இன்றைய சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் முக்கிய புள்ளியாக இருப்பவர் அவருடைய கணவரும் ஒரு நடிகரே. நடிகையின் வீடு எப்படி இருக்கும் என்று நீங்கள் எப்பிடி எல்லாம் நினைப்பீர்களோ  அதைவிட அழகாய் ஒரு வீடு, உள்ளே தம்பதியர் வாங்கிய அணைத்து பதக்கங்களும் தனியறையில் அணிவகுக்க, உலக ஒருமைபாட்டுக்கு சின்னமாக, புதுவை ஆரோவிலில் அணைத்து நாட்டு மண் கொண்ட ஒரு சின்னம் உண்டு, அது போல் அணைத்து நாட்டு நினைவுப்போருட்களும் வீட்டை அழகுபடுத்த, அவர்களின் வெற்றி பாதையை பிரதிபலித்தது. மாடியில் தம்பதியர் உறங்க  அவர்கள் நேர் எதிரே விலை உயர்ந்த வெளிநாட்டு கெடிகாரம் மணி 5 00 . சூரியன் உதித்துவிட்டான் கடலோரத்தில் நடை பழகுவோரும், எடை குறைப்போரும், மீன் பிடிப்போரும் என மெரினா விழித்துகொண்டிருந்தது , அண்ணா நகர் காவலர்கள் குடியிருப்பு  மைதானத்தில் காவலர்கள் தங்கள் காலை பயிற்சியை செய்து கொண்டிருந்தனர், மைதானத்தை தள்ளி உயர் அதிகரர்களின் குடியருப்பு அதில் முதல் வீடு , சூரியன் உள்ளே எட்டிபார்க்க தரையில்  மாத்தலா போட்டு ஒரு புதுமன தம்பதியர் அணைத்துக்கொண்டு படுத்திருக்க, சத்தியன் IPS என்ற பட்டம் கர்வத்துடன் நிமிர்ந்துநிற்கும் சத்யனின் படத்தின் கீழ் இருக்க, குருவி கத்துவதுபோல் காலை அலாரம் அடித்தது மணி 5 30 மனைவியை அணைத்தபடி அலாரத்தை நிறுத்தினான் சத்யன் அதே நேரம், தம்பரதிலும்,டி நகரிலும் , நுங்கபக்கதிலும், கோடம்பாக்கத்திலும் அலாரம் அணைக்க பட்டது. இன்று நடக்க போகும் நிகழ்வுகள் ஏதும் அறியாமல் அனைவரும் துழில் கலைந்தனர்.  

வெள்ளி, 18 மே, 2012

Love simply is.


Love simply is.
A feeling on your parents,
A feeling on your siblings,
A feeling on your children,
A feeling on your partner,
A feeling on your friend,
A feeling on anything,
Which is different from
a feeling on someone.
If you feel that difference
then that is LOVE.

(S)He will be front of you,
You'll not notice,
    as (s)he is transparent.
You’ll know everything,
    as (s)he is nude.
You’ll talk less,
    (s)he understands a lot.

   
Living for someone,
Someone living for you,
is love,
Only when both know that.

வியாழன், 17 மே, 2012

நீ நான்:உரசல்

நெரிசலில் உரசி நின்றோம் 
கண் பார்க்க முடியாமல் 
காதுகள் பார்த்து நின்றோம் 

இதயம் துடித்ததை இருவரும் உணர்ந்தோம் 
தடுமாறி இதயங்கள் இடம்மாறின 
தோள்களோடு நம் மூச்சுகாற்று உரையாடின 

நெரிசல் கலைந்த பின்னும் 
உரசி நின்றோம் மனதுக்குள்ளே 
சிலிர்த்துக்கொண்டோம் கண்கள் பார்த்து
சிரித்துக்கொண்டோம்

உரசிய காயம் மட்டும் நெஞ்சுக்குள்ளே !

நீ நான்:போதும்

உன் நினைவொன்று போதும் 
நிமிடங்கள் நான் கரைப்பேன் 
உன் பெயரொன்று போதும் 
கவிதைகள் நான் படைப்பேன்
உன் பார்வை ஒன்று போதும் 
இப்பாருலகம் நான் அடைவேன் 
என்னருகே நீ இருந்தால்
கறைவேன் நானே உன்னருகே

நீ நான்:சொல்ல தெரியவில்லை

ஏதெதோ செய்கிறது 
சொல்ல தெரியவில்லை 
ஏதெதோ பேசிக்கொண்டேன் 
எனக்குள்ளே 
ஆயிரம் கவிதைகள் 
உனக்குள்ளே 
சொல்லாத காதல்
எனக்குள்ளே 
சுகங்கள் எல்லாம்
உனக்குள்ளே 
சோகங்கள் எல்லாம்
எனக்குள்ளே
சோகங்கள் எனக்கு
சுகங்களே
சொல்ல தெரியிவில்லை
என் காதலே

நீ நான்:வரங்கள்

சேர்ந்திடவே உனையே
செரா வார்த்தைகள் சேர்த்திட்டேன்
பார்த்திடவே உனையே
வாரா கனவுகள் தேடினேன்
முகர்ந்திடவே உனையே
வாடா மலர்கள் நாடினேன்
வந்திடவே நீ என் முன்னே
வரங்கள் வேண்டினேன்

புதன், 16 மே, 2012

நீ நான்:முதல் பார்வை

ஞாயிறு இல்லாத ஞாயிறு மாலை
கடிகார முள்ளிரெண்டும் இணையும் வேலை
தென்றல் அசைவில் ஆலய விளாகம்
பழைய நினைவுகளில் அலையுது உள்ளம்
உதிக்கும் சந்திரன் நிறமோ, பொன்னோ இல்லை பெண்ணோ 
சிவப்பு சுடியனிந்து தென்றலாய் கடந்தவளை
பார்த்ததும் அன்றுதான், எனை தொலைத்ததும் அன்றுதான்
அவள் ஊரோ பேரோ அறியிலேன், வழியோ வயதோ அறியிலேன்
அவள் உரு மட்டும் தெரிந்தேன், என் உயிர் கூட மறந்தேன் 

முதல் சந்திப்பு

ஞாயிறு மாலை 5.30 மணி அனைவரும் கோவிலுக்கு கிளம்பி கொண்டிருந்தோம், எனக்கு மட்டும் ஒரு படபடப்பு, கோவிலுக்கு தாமதமானது காரணமில்லை, முதன் முதலாய் பெண் பார்க்க போகிறேன். எப்பிடி இருப்பாள், என்னை பிடிக்குமா போன்ற கேள்விகள் என் மனதுக்குள், நம்மை அழகாய் காட்ட எந்த உடை போடலாம் என்ற குழப்பம் வேறு. தேர்வறையில் கேள்வித்தாள் பார்க்கும் முன் வருமே, பிரசவத்தின் கடைசி நிமிடங்களில் நம் பிள்ளையை பார்க்கும் முன் வருமே அது போன்ற ஒரு உணர்வு . எனக்கு பிடித்த நீல நிற முழுக்கை சட்டை, கருப்பு ஜீன்ஸ் உடுத்திக்கொண்டு கோவிலுக்கு சென்றேன், அன்று கோவில் விளாகத்தில் தான் பூசை நடந்தது, உள்ள நுழைந்ததும் எனது கண்கள் அங்கிருந்த அனைவரையும் வரிசைப்படுத்தி, ஆண், பெண், வயது என வகை படுத்தி அலசி அராய்ந்து கொண்டிருந்தது. ஒரு காலி இடத்தில் பொய் அமர்ந்தேன். எனக்கு முன்னே ஒரு ஏழடி தூரத்தில் கருப்பு புள்ளி போட்ட வெள்ளை  சுடிதாரில் ஒரு பெண் இவளாய் இருப்பாளோ மனதிற்குள் ஒரு கேள்வி, முகம் தெரியவில்லை ஆனாலும் அழகாய் தெரிந்தாள்.  சமாதானம் சொல்ல திரும்பிய போது நெற்றிக்கு மேல் சுருள் முடி சின்ன கிரீடம் போல் இருந்தது. இவளாய் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன், நாம் நினைப்பதெல்லாம் எங்கே நடக்க போகிறது, வேறு யாரோ வரபோகிறார்கள் நாம் ஏமாற போகிறோம் என்றும் நினைத்தேன்.

பூசை முடிந்தது, கூட்டமாய் நின்றிருந்த ஒரு ஒரு குடும்பத்தை நோக்கி என் அக்கா சென்றார்கள், பின் என்னையும் அழைத்து அறிமுக படுத்தினார்கள், எனக்கு முன் அமர்ந்து  இருந்த அதே பெண், அழகாய் இருந்தாள்.  நேற்று அழகு நிலையத்தில் நான் Bleaching, Facial  செய்தும் அந்த இருட்டில் அவர்களுக்கு நிறமாய் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. ஒல்லியான, கருப்பு உருவம், பார்த்த உடனே பிடிக்கும் போலில்லை இரண்டு நாளில் கூறுவதாய் பிறிந்தார்கள்.

காத்து இருந்தேன், கற்பனைகளில், கனவுகளில், கேள்விகளில்,  ஒரு நாள், இரு நாள் .....